புதுடில்லி: வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும், ‘யூனோ மிண்டா’ நிறுவனம், மஹாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில், 764 கோடி ரூபாய் முதலீட்டில், பயணியர் கார்களுக்கான, இரண்டு உலோகங்களின் கலவையான அலாய் சக்கரங்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது.
இது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் படிப்படியாக கட்டமைக்கப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலையில், ஆண்டுக்கு 18 லட்சம் அலாய் சக்கரங்களை உற்பத்தி செய்ய முடியும்.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மெஹ்ரா கூறியதாவது:
புதிய ஜி.எஸ்.டி., வாகனத் துறைக்கு ஆதரவான அரசு கொள்கைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவை, வாகன தேவையை அதிகரிக்கிறது. யூனோ மிண்டா நிறுவனம், நவீன உற்பத்தி, உள்நாட்டு மயமாக்கல், உற்பத்தி விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
வாகன பாதுகாப்பு, பிரீமியம் மற்றும் மின்சார கார்களின் வாயிலாக எங்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
