தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தி.மு.க வில் எதிர்பாராத மாற்றங்கள் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி காங்கிரஸ் கட்சிக்கும் கந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஎம் க்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திருமயம் அமைச்சர் ரகுபதி, ஆலங்குடி அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை முத்துராஜா என 3 தொகுதிகளில் நடப்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விராலிமலைத் தொகுதியில் கடந்த முறை வெற்றிவாய்ப்பை இழந்த பழனியப்பனுக்கே சீட்டு கிடைக்கும் அதனால் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி ஏற்படும் என்று திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக திமுக வடக்கு மா.செ கே.கே.செல்லப்பாண்டியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திமுகவினர் கூறும் போது, ”விராலிமலை தொகுதி உருவாக்கப்பட்டு 3 தேர்தல்கள் நடந்துள்ளது. 3 முறையும் அதிமுக விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார் . 2 முறை திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் பழனியப்பன். இவருக்கே இந்த முறை சீட்டு கொடுத்தால் அதிமுக விஜயபாஸ்கருக்கு பலமான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் திமுக தலைமை விராலிமலை தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்காமல் புதுக்கோட்டை தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த வடக்கு மா செ கே.கே.செல்லப்பாண்டியனை வேட்பாளராக்கி உள்ளது. கேட்காத தொகுதி கிடைத்துள்ளதாக வேட்பாளர் தரப்பில் சிறு வருத்தம் இருந்தாலும் இரு கட்சி மா.செ.க்கள் நேருக்கு நேர் மோதுவது பலமான போட்டியாக இருக்கும் என்கின்றனர். மேலும் திமுக செல்லப்பாண்டியன் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது என்கின்றனர்.
