நமது நிருபர்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து ஆதிராஜாராமும் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்தது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி களம் காண்பது உறுதியானது.
தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார். இந்த பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி வேட்பாளர், துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் விபரம் தெரியவந்தது. அதன் விபரம் பின்வருமாறு:
கொளத்தூர்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
சேப்பாக்கம்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து, அதிமுக சார்பில் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக ஆதிராஜாராம் உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து போட்டியிடுவது யார் என்ற விபரம் வெளியானதால், அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. இனி தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் இறங்கிவிடும்.
