தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நேற்று மாலை திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் வீட்டை முற்றுகையிட்ட திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஏன் இந்த முறை சீட்டு ஒதுக்கப்படவில்லை என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கிருத்திகா தேவிவை மாற்றிவிட்டு மீண்டும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கக் கோரி வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு சிலர் அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
அப்பொழுது அங்கு பேச்சுவார்த்தை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கூட்டத்தில் அழுதுகொண்டிருந்த நபரை பார்த்து ”மற்றவர்களுக்கு எல்லாம் கவலை இல்லையா? என்னய்யா நடிச்சிட்டு இருக்க. நான் என்ன கல்லுன்னு நெனச்சியா. உனக்கு முன்னால் இருந்து, சின்னப் பிள்ளையில் இருந்து எனக்கு அவர் நண்பர் தெரியுமா? அவருடைய இன்ட்ரஸ்ட் எனக்கு இல்லையா? அவருக்கு என்ன செய்ய வேண்டும் எனக்கு தெரியாதா? இந்த காரணத்தை எல்லாம் இவ்வளவு பேருக்கு முன்னால் நான் சொல்ல முடியுமா? நீ அழுது சீன் போட்டால் நான் உடனே சொல்லிட வேண்டுமா? யார் சீன் போடுறவங்க யார் உண்மையா இருக்கின்றவர்கள் என எனக்கு தெரியும். அவருக்கும் தெரியும். நான் வந்ததிலிருந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன் நீ அழுது கொண்டே இருக்கிறாயே என்ன அர்த்தம்” என்று ஆவேசமாக பேசிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
