‘உடைந்த கிளாஸ ஒட்ட வச்ச மாதிரி இருக்கு திமுக கூட்டணி’-விஜய் பேச்சு

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் கொள்கை தலைவர்கள் புகைப்படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில் விஜய் பேசுகையில், ”இந்த கூட்டத்தை வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டம் என்று சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரைக்கும் இது நம்முடைய மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு கூட்டம். அப்பட தான் இதை நான் சொல்ல வேண்டும். நம்ம கட்சிக்காரங்களுக்கு தேர்தலை எதிர்கொண்ட அனுபவங்கள் இல்லை என்று சொல்வார்கள். நம்முடைய வேட்பாளர்கள் எல்லாருமே ரொம்ப சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பின்னாடி பெரிய பேக்ரவுண்ட் எல்லாம் இல்லை. அப்படி இப்படி என்றெல்லாம் சொல்வார்கள். நானும் எல்லாருக்கும் ஒன்று சொல்கிறேன் ஒரு எம்எல்ஏ என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்.

ஒரு எம்எல்ஏ என்பவர் சும்மா அனுபவத்தை வைத்துக்கொண்டு கொள்ளையடிப்பவர்களாக இருக்கக் கூடாது, சும்மா அனுபவத்தை வைத்துக்கொண்டு சட்டவிரோதமான கல்குவாரியில் ஈடுபடுபவர்களாக இருக்கக்கூடாது, சும்மா அனுபவத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கும் பிரஸ் ரிப்போர்ட்டர்களை தாறுமாறாக தாக்குபவர்களாக இருக்க கூடாது. இன்னும் ஓப்பனாக சொல்ல வேண்டும் என சொன்னால் திமுகவிலிருந்து வந்த ஒரு எம்எல்ஏ மேல கொள்ளை அடிச்ச கேஸ் இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் கேஸ் இருக்கிறது, திருட்டு கேஸ் செல்லம் இருக்கிறது. ஜெயிலுக்கு போய்விட்டு வந்த ஒருவர் இருக்கிறார். நீங்கள் கூட யோசிக்கலாம் ‘அவர் யாரு?’ என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த எம்எல்ஏ யார் என்று யோசிக்க தோணும். இன்னொரு க்ளூ  வேண்டுமென்றால் தருகிறேன்.

அந்த திருட்டு கேஸில் உள்ள போயிட்டு வந்தவரை யாருக்கு எதிராக இந்த திமுக தேர்தலில் நிற்க வைத்தார்கள் தெரியுமா? இன்னைக்கு அவங்க கூட்டணியில் மூச்சுக்கு 300 தடவை முட்டுக் கொடுக்கும் மிகப்பெரிய தலைவருக்கு எதிராக அந்த தலைவரை தோற்கடிக்க வேண்டும் என 1996  தேர்தலில் நிற்க வைத்தார்கள். எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் நான் போய் நிற்க முடியாது அல்லவா அதனால் என் சார்பாக என் பிரதிநிதிகளாக நானே பார்த்து பார்த்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நம்முடைய அக்கா, நம்முடைய தங்கை, நம்முடைய அண்ணன், தம்பி என சொல்லி வேட்பாளர்களை செலக்ட் பண்ணி உங்கள் முன்னால் ஒப்படைக்கிறேன். மக்களே அவர்களை எம்எல்ஏ ஆக்க வேண்டியது  உங்களுடைய பொறுப்பு. விஜய்க்கு எல்லாம் என்னப்பா செல்வாக்கு இருக்குது அதெல்லாம் வேடிக்கை பார்க்க வர கூட்டம் என்கிறார்கள். இந்த தேர்தல் இருமுனை போட்டி மட்டும்தான். மக்கள்  கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கு மட்டும்தான் இந்த தேர்தல்.

திமுக பழைய மக்கள் நல கூட்டணியாகவும் மாற்றிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. உடைந்த கிளாஸ் ஒட்ட வச்ச மாதிரி கிழிந்த துணியை தைத்து வைத்த மாதிரி  உள்ளது. அது ஒரு ஓட்டு போட்ட கூட்டணி அவ்வளவுதான். அதனால் சிந்தாமல் சிதறாமல் நம்முடைய டிவிகே வேட்பாளர்களுக்கும், நம்முடைய விசில் சின்னத்திற்கும் தயவுசெய்து ஓட்டு போட்டு விடுங்க.

மக்களுக்காக மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் ஜெயித்து வந்த பிறகு மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன். ஊழல் கறை படியவே விடமாட்டேன். பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவேன். சட்டம் ஒழுங்கை சரி செய்ய துணை நிற்பேன். ஒரு நாளும் மக்கள் விரோத செயலில் ஈடுபட மாட்டேன். இது சத்தியம்” என்றார்.

பெரம்பூர் சி.ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு  சி.ஜோசப் விஜய்.. என வேட்பாளர் பட்டியலை வாசித்தார்.

Source link