அதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டது. 18-ந்தேதி முதலே எங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். 19-ந் தேதி உடனடியாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் நான் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிய பகுதிக்கு நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19-ந்தேதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி பக்கிள் ஓடையை தூர் வாரி சரி செய்ய 80 சதவீத பணிகள் செய்திருந்தோம். தி.மு.க. ஆட்சி வந்த பிறகு 20 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் தூத்துக்குடி நகரில் வெள்ளம் தேங்கி இருக்காது. இதனால் வெள்ளம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதே தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டுக்கு சான்று.
அ.தி.மு.க. கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. கூட்டணியில் இணக்கமாக செயல்படுகின்றோம். எங்கள் கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை. எந்தவித சலசலப்பு இன்றி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல், தற்போது 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கி விரைந்து செயல்பட்டு வருகிறோம்.
