சென்னை: கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 9வது முறையாக செங்கோட்டையன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இதுகாணும் வரை 8 முறை அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் எம்எல்ஏவாக வென்ற அவர், முதல்முறையாக தவெகவின் விசில் சின்னத்திலும், 9வது முறையாக கோபிச்செட்டிபாளையத்தில் வேட்பாளராகவும் களம் இறங்குகிறார்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தேர்தல் பணிகளில் குதித்து இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், மார்ச் 31ம் தேதி திருவாரூரில் தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்.
மற்ற முக்கிய கட்சிகளுக்கு முன்னர் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் சீமான், தேர்தல் பிரசாரத்தையும் வேகப்படுத்தி உள்ளார். தமிழக அரசியலின் புதிய வரவாக அறியப்படும் தவெகவில் அக்கட்சியின் தலைவர் விஜய், இன்று வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார். அண்மையில் கட்சியில் இருந்த பலருக்கும் சீட் கொடுக்கப்பட்டாலும் விஐபி வேட்பாளராகவும், அனைவரும் அறிந்த அரசியல் முகமான செங்கோட்டையனுக்கு கோபிச்செட்டிபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இபிஎஸ் உடனான மோதல் போக்குக்கு பின்னர், அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட செங்கோட்டையன், இப்போது அதே தொகுதியில் தவெக வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். 8 முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் ஒரே தொகுதியில் போட்டியிட்ட செங்கோட்டையன், தற்போது 9வது முறையாக அதே தொகுதியில் தான் போட்டியிடுகிறார். ஆனால், விசில் சின்னத்தில் தவெக வேட்பாளராக களம் காண்கிறார்.
தொகுதி அடிப்படையில் பார்த்தால் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் 9வது முறையாக போட்டியிடுகிறார். அதே சமயத்தில் ஒட்டுமொத்த அரசியல் பயணத்தை கணக்கிட்டால் அவர் 2026ம் ஆண்டு தேர்தலில் 10வது முறையாக போட்டியிடுகிறார். அதாவது, 1977ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து அதிமுக எம்எல்ஏவாக ஆனார். அந்த தொகுதி பின்னர் நீக்கப்பட்டது. அதன் பின்னர் 8 முறை கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏவாக இருந்தார்.
தேர்தல் கணக்கீட்டின்படி தற்போது 10வது முறையாக எம்எல்ஏ வேட்பாளராகவும், 9 முறை எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். இப்போது 10வது முறையும் அதே கோபிச்செட்டி பாளையம் தொகுதி தான்… ஆனால் தவெகவுக்கு மாறியதால் அவரின் சின்னம் விசில் ஆனது.
விஐபி தொகுதியாக அறியப்படும் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக வி.பி. பிரபு அறிவிக்கப்பட்டு உள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், இவர் கோபி மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இப்போது முதல்முறையாக கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அதிமுகவின் எம்எல்ஏ வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். திமுக வேட்பாளராக நல்லசிவம் போட்டியிடுகிறார். ,இதே தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் விஐபி அந்தஸ்து பெற்றுள்ள இந்த தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
