“சொல்லக் கூடாது, ஆனால் கிருஷ்ணசாமி என்னைச் சொல்ல வைக்கிறார்”

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதில், 15 தொகுதிகள் வரை கிருஷ்ணசாமி கேட்டதாகவும், அதனை மறுத்த அதிமுக அதிகபட்சமாக 5 தொகுதிகள் வரை கொடுக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த கிருஷ்ணசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 60 முதல் 70 தொகுதிகள் வரை தனித்து போட்டியிடவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிருஷ்ணசாமி எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கன்னியாகுமரிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று (29-03-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கிருஷ்ணசாமியின் நிலைப்பாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கிருஷ்ணசாமி எங்களுடன் பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. அவர் சீட்டு கேட்கிற அளவுக்கு எங்களால் கொடுக்க முடியுமா? எங்களிடம் 10 சீட்டு கேட்டாரு, அப்புறம் 5 சீட்டு கேட்டாரு. பேச்சுவார்த்தை நேரடியாக இல்லை, வேறு ஒரு ஆள் சொன்னாரு. எங்களால் இயலாது என்று சொல்லிவிட்டோம் அவ்வளவு தான். கடந்த 2021இல் சட்டமன்றத் தேர்தலில் எங்களுடன் அவர் கூட்டணியிலேயே இல்லை. ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் சேருகின்ற போது அந்தெந்த கட்சியினுடைய வாக்கு வங்கியின் அடிப்படையில் தான் சீட்டு கொடுக்க முடியும். சொல்லக் கூடாது, ஆனால் சொல்ல வைக்கிறார்.

31 தொகுதியில் போட்டியிட்டு 33,000 ஓட்டு வாங்கிருக்காரு. அவருக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். கூட்டணியில் அங்கம் வைக்கின்ற கட்சிகள் எல்லாம் அந்தெந்த கட்சிகள் வாங்கிய வாக்கின் அடிப்படையில் தான் சீட்டு ஒதுக்கீடு செய்யப்படும். அது அதிமுகவும் சரி, திமுகவும் சரி, அப்படித்தான் கடைபிடிக்கிறார்கள். அந்த அடிப்படையில் கடைபிடித்தால் பரவாயில்லை. அவர் எங்களுக்கு அதிகமான சீட்டு கேட்டு ஆள் அனுப்பினால் எப்படி முடியும்? அதுவும் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவருக்கு தேவையானவரை அனுப்பினார், நாங்கள் இயலாது என்று சொல்லிவிட்டோம். அதோடு முடிந்துவிட்டது” என்று கூறினார். 

Source link