2026 சட்டமன்ற தேர்தல்- சிறையில் இருந்தே வேட்புமனு தாக்கல்… யார் அந்த தங்க மனிதன்? – 2026 assembly elections filing nomination from prison who is that golden man

ஆலங்குளம் தொகுதியில் சிறையில் இருந்தபடி ஹரி நாடார் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். 2021-ல் பெற்ற 37,000 வாக்குகள் இம்முறை அவருக்கு கைகொடுக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hari Nadar Alangulam(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக அரசியலில் தனது தனித்துவமான தோற்றத்தாலும், அதிரடி பேச்சுகளாலும் எப்போதும் பேசுபொருளாக இருக்கும் சத்திரிய சான்றோர் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார், 2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

பல்வேறு நிதி மோசடி புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சிறை கண்காணிப்பாளரிடம் நாளை தனது அதிகாரப்பூர்வ வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.

சட்ட நடைமுறையும் சிறை கண்காணிப்பாளர் ஏற்பாடும்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படாத வரை, சிறையில் இருக்கும் ஒரு நபர் தேர்தலில் போட்டியிட எவ்விதத் தடையும் இல்லை. அதனடிப்படையில், ஹரி நாடார் தனது மனுவை நாளை காலை 11 மணியளவில் புழல் சிறை கண்காணிப்பாளரிடம் வழங்குகிறார். இந்த மனு பின்னர் உரிய பாதுகாப்புடன் ஆலங்குளம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு (RO) அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே அவரது வழக்கறிஞர்கள் இதற்கான சட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஆலங்குளம் ஏன்? – 2021-ன் மெகா ஹிட் பின்னணி

ஹரி நாடார் ஏன் மீண்டும் ஆலங்குளத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு ஒரு வலுவான காரணம் உண்டு. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் களம் கண்டார். அப்போது சுமார் 11 கிலோ தங்கம் அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்து இந்திய அளவில் வைரலானார். அந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 37,727 வாக்குகளைப் பெற்று, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்தார். இந்த வாக்கு வங்கி பலமே அவரை மீண்டும் அதே தொகுதியில் சிறையில் இருந்தே போட்டியிடத் தூண்டியுள்ளது.

மும்முனைப்போட்டியை உருவாக்குவாரா?

ஆலங்குளம் தொகுதியில் தற்போது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ஹரி நாடாரின் வருகை ஒரு மும் முனைப் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இத்தொகுதியில் உள்ள நாடார் சமூக வாக்குகளைப் பிரிப்பதில் ஹரி நாடார் ஒரு முக்கிய காரணியாக இருப்பார். கடந்த முறை அவர் பெற்ற 37,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் இம்முறை யாருக்குச் செல்லும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே ஆலங்குளம் தொகுதியில் சிறையில் வாடும் சிங்கம் சீறி வரும் போன்ற சுவரொட்டிகளை ஒட்டி தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கிச் சிறையில் இருந்தாலும், மக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும், சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்று சாதனை படைப்பேன் என்றும் ஹரி நாடார் தரப்பு நம்பிக்கைத் தெரிவிக்கிறது. 2021-ல் ‘தங்க மனிதனாக’ வலம் வந்த ஹரி நாடார், 2026-ல் ‘சிறை கைதியாக’ களம் காண்பது ஆலங்குளம் தேர்தல் முடிவை எப்படி மாற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவரது அரசியல் வருகை அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.