திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டன்றத் தொகுதி அ.தி.மு.க.வில் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள், அச்சமுதாய மக்களை அ.தி.மு.க.விற்கு எதிராக திசை திருப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. 2016 மற்றும் 2021 என தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது மீண்டும் மூன்றாவது முறை வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க.வில் வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் விரும்புகின்றனர். ஆனால், தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுக சார்பில் மூன்று கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 127 பேர் கொண்ட இரண்டாம் கட்டப் பட்டியலில் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் இ.சரோஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக சார்பில் டி.இந்திரா காந்திக்கு சீட் கிடைத்தது. இம்முறை புதுமுகத்தை எடப்பாடி பழனிசாமி களமிறக்கியுள்ளார். இதில் தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதுபற்றி துறையூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வில் நீண்டநாட்களாக இருக்கும் தேவேந்திர வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம். ‘‘சார், துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் தனி தொகுதியாக இருக்கிறது. எனவே, இங்கு தேவந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை களமிறக்கினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் வெற்றி பெறும் சூழல்கள் இருக்கிறதா என்பதை தலைமை ஆராயவேண்டும். இல்லாவிட்டால் இங்கு மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. காரணம், துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் முத்தரையர் வாக்குகள் அதிகளவில் இருக்கிறது. தவிர, சுமார் 55 ஆயிரம் வாக்குகள் தேவேந்திர குலவேளாளர் சமுதாய வாக்குகள் இருப்பதால், அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. 1,000 வாக்குகள் கூட இல்லாத மாற்று சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது உட்கட்சி பூசலை உண்டாக்கியுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியானதை அடுத்து, போஸ்டர்கள் அடித்து தொகுதியின் பல்வேறு பகுதியிலும் ஒட்டி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனை துறையூர் வாழ் தேவேந்திர குல வேளாளர் நல சங்கத்தினர் செய்துள்ளனர். இங்கு 60,000 பேருக்கும் மேல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வெற்றி வாய்ப்பு கிட்டும் என்கின்றனர்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக நேர்காணல் நடத்தினார் அப்போது, அருந்ததியர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் நேர்காணலுக்கு சென்றனர். உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. எனவே, துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த, தகுதியான ஒரு நபரை நிறுத்தினால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும். இல்லாவிட்டால் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த பல வருடங்களாக தொகுதிக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்து வருபவர் அ.தி.மு.க.வில் விருப்பமனு கொடுத்து காத்திருக்கிறார். அவருக்குத்தான் வாய்ப்பு என முதலில் கூறப்பட்டது. ஆனால், சில குளறுபடிகளால் தகுதி வாய்ந்த நபருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் தகுதிவாய்ந்த, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை களத்தில் இறக்கினால்தான் தி.மு.க.விற்கு எதிராக களத்தில் இறங்கி போராட முடியும். இல்லாவிட்டால் தி.மு.க.வின் வெற்றி எளிது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தும், சிலர் முட்டுக்கடை போடுவதால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கலாமா? அல்லது……? என மாற்றி யோசிக்க ஆரம்பித்து வருகிறார்கள் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள்’’ என்ற அதிர்ச்சி குண்டை போட்டனர்.
இந்த சூழலில் அதிமுக தலைமையை கண்டிக்கும் வகையில் போஸ்டர்களை பதிவிட்டுள்ளனர். இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் நாங்குநேரி போல துறையூரில் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று துறையூர் வாழ் தேவேந்திர குல வேளாளர் நல சங்கத்தினர் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் காரணமாக துறையூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கான வேலைகளில் ஈடுபடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
