சென்னை: ‘தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஏப்., 1 முதல், 5ல் இருந்து, 10 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயரும் நிலையில், ‘டிஜிட்டல்’ பணபரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில், 66 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இவ்வழியாக செல்லும் வாகனங்களில் ஆர்.எப்.ஐ.டி., தொழில்நுட்ப அடிப்படையிலான ‘ஸ்டிக்கர்’ மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வாகன முகப்பு கண்ணாடியில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும். சுங்கச்சாவடியில் உள்ள ‘ஸ்கேனர்’ உடன் இந்த ஸ்டிக்கர் இணைக்கப்பட்டு ‘பாஸ்டேக்’ நடைமுறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள், நேரடியாக பணம் செலுத்தி, சுங்கச்சாவடிகளை கடந்து செல்கின்றன.
இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகிகள் கூறியதாவது:
அனைத்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிலும் பே டி.எம்., மற்றும் என்.எச்.ஏ.ஐ., இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. பாஸ் கட்டணம், 3,000 ரூபாய் செலுத்தினால், தனியார் கார்கள், ஜீப்களுக்கு ஓராண்டு அல்லது 200 பயணங்களுக்கு கட்டணமின்றி அனுமதி வழங்கும் வசதியும் உள்ளது.
ஏப்., 1 முதல், ‘ஆன்லைன் டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
