சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது. தி.மு.க., – அ.தி.மு.க.,

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது. தி.மு.க., – அ.தி.மு.க., கூட்டணிகள் சார்பிலும், த.வெ.க., – நா.த.க., கட்சிகள் சார்பிலும் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள், இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனர்; வரும் 6ம் தேதி வரை, அதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் இன்று துவங்கி, ஏப்., 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.

விடுமுறை

நாளையும், ஏப்ரல் 1, 3, 5ம் தேதிகளும் அரசு பொது விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, அந்த நாட்களில் மனு தாக்கல் நடக்காது என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

எனவே, ஏப்., 6 வரை மனு தாக்கல் செய்யலாம் என்றாலும், மனு தாக்கலுக்கு நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்துள்ளனர். மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமும் காலை 11:00 முதல் மாலை 3:00 மணி வரை மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய, மாலை 3:00 மணிக்குள் வருவோருக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அனைவரும் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், கூட்டத்தை சேர்க்காமல், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

‘கவனிப்பு’

மனு தாக்கலின் போது, வேட்பாளர்களுடன் வரும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு கவனிப்புகள் இருக்கும். அவற்றை கண்காணிக்க, வாகன சோதனையை தீவிரப்படுத்த, தேர்தல் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. துணை ராணுவப் படையினர், 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், தி.மு.க., – அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சி, அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால், நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது.

மேலும், ராமதாஸ் – சசிகலா அணி, புதிய தமிழகம் கட்சியும் தனித்து வேட்பாளர்களை நிறுத்துவதால் தயாராகி வருகின்றன. வேட்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனு தாக்கல் செய்ய முதல் நாளான இன்று, அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதேபோல, தி.மு.க., மற்றும் த.வெ.க.,விலும் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்திலும் இன்று வேட்பு மனு தாக்கல் துவக்கம்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கும், இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஏப்ரல் 23ல் தேர்தலை சந்திக்கும், 152 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 29ல் தேர்தல் நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, ஏப்ரல் 6ம் தேதி கடைசி நாளாகும். மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற, ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும்.

Source link