சென்னை: பட்டா விண்ணப்பங்களை போன்று, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்ட விண்ணப்பங்களையும், குறிப்பிட்ட நாளில் முடிக்காமல், வருவாய் துறை அதிகாரிகள் நிராகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சொத்து வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றக்கோரி, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து வந்தனர். இதை எளிமைப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று, அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள், இந்த இணையதளத்தில் நேரடியாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் மீது, 30 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என, வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், பெரும்பாலான அதிகாரிகள், 30 நாட்கள் வரை அமைதியாக இருந்து விட்டு, கடைசியில் தேவையான விபரங்கள் இல்லை என்று கூறி, விண்ணப்பங்களை நிராகரித்து விடுகின்றனர்.
இதனால், பட்டாவுக்காக மக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது இதே முறையில், சமூக பாதுகாப்பு திட்ட விண்ணப்பங்களையும், அதிகாரிகள் நிராகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவையர், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம், திருமணமாகாத பெண்கள், இலங்கை அகதிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் போன்றவற்றுக்கு, வருவாய் துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக, மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்க, புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு, பொதுமக்கள், www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
கிராமப்புற மக்கள், விண்ணப்பங்களை பதிவு செய்ய சிரமப்படுகின்றனர். இ – சேவை மையங்களில் பணம் செலுத்தி, இந்த மனுக்களை பதிவு செய்கின்றனர்.
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு, பொதுமக்கள் எளிதாக விண்ணப்பிக்க புதிய வசதி அறிமுகமானது. ஆனால், பட்டா விண்ணப்ப மனுக்கள் போன்று, இந்த விண்ணப்பங்களையும், 30 நாட்களில் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாலுகா அலுவலக அதிகாரிகள், இந்த மனுக்களை, 30 நாட்களில் முடிக்காமல், கூடுதல் விபரங்கள் இல்லை என்று கூறி, ஓசைப்படாமல் நிராகரித்து விடுகின்றனர்.
இவ்வாறு நிராகரிக்கப்படும் விபரம் மனுதாரர்களுக்கு தெரிவதில்லை. சில மாதங்கள் கழித்து, இதுகுறித்து விசாரிக்க செல்லும்போது தான், மனு நிராகரிக்கப்பட்ட விபரம் தெரியவருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
