திண்டுக்கல்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில், ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், எஸ்.பாறைபட்டியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன், 34; டெலிவரி நிறுவன ஊழியர். இவரது மனைவி அன்னபூரணி. தம்பதிக்கு ஏற்கனவே மகள் உள்ள நிலையில், அன்னபூரணி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மார்ச், 19ல் அருண்பாண்டியன் தன் நண்பருடன் டூ – வீலரில், திண்டுக்கல் – பழனி நெடுஞ்சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்தவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, அவரது கல்லீரல், சிறு நீரகம், கண், தோல் உள்ளிட்ட, 5 உறுப்புகள், திருச்சி, மதுரை உள்ளிட்ட, 5 இடங்களுக்கு அனுப்பப்பட்டன. இதன் வாயிலாக, ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.
