புதுடில்லி: ”மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமாளிக்க வேண்டும். எரிபொருள் தொடர்பாக பரவும் வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது. இந்த சமயத்தில் எதிர்க்கட்சிகளும் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது,” என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். ‘மன் கீ பாத்’ எனப்படும், ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இம்மாதத்திற்கான நிகழ்ச்சியில், அவர் நேற்று பேசியதாவது:
கொரோனா தொற்றுக்கு ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது; எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்தது.
அந்த பேரிடர் காலத்தில் இருந்து உலக மக்கள் மெல்ல மீண்டு, வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதே வேளையில், உலகின் சில பகுதிகளில் தொடர்ந்து சண்டையும் நடக்கிறது.
மேற்காசிய நாடுகளில் ஒரு மாதமாக போர் நீடிக்கிறது. அந்நாடுகளில் நம் குடும்ப உறுப்பினர்கள் , நண்பர்கள் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக, மேற்காசிய நாடுகளில் நிறைய பேர் பணியாற்றி வருகின்றனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் போரால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்காசிய நாடுகள் வழங்கி வருகின்றன. இதற்காக அந்நாடுகளுக்கு நன்றி.
நம் எரிபொருள் தேவைகளை நிறைவேற்றும் முக்கிய கேந்திரமாக திகழும் பிராந்தியங்களில் தான் தற்போது போர் நடக்கிறது.
இதனால், உலகம் முழுதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
‘கியான் பாரதம்’ சர்வே
நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்த சவாலை சமாளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். ஏனெனில் இது, 140 கோடி மக்களின் நலன் சம்பந்தப்பட்டது.
நாட்டு மக்களும் வதந்திகளை நம்ப வேண்டாம்; விழிப்புடன் இருந்து, அரசு வழங்கும் தகவல்களை மட்டும் நம்ப வேண்டும். அதற்கேற்றபடி முடிவெடுக்க வேண்டும்.
நம் மகத்தான கலாசாரம் மற்றும் புராதன பெருமைகள் தொடர்புடைய, ‘கியான் பாரதம்’ சர்வே என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொபைல் செயலி மூலம் நடக்கும் இந்த சர்வேயில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டும்.
உங்களிடம் பழங்கால ஓலைச்சுவடிகள், இலக்கிய பிரதிகள் போன்ற வரலாற்று ஆவணங்கள் இருந்தால், அந்தத் தகவலை இந்த மொபைல் செயலியில் புகைப்படத்துடன் பகிருங்கள்.
அமிர்தசரசைச் சேர்ந்த பாய் அமித் சிங் ரானா என்பவர் குர்முகி மொழியில் இருந்த பழங்கால பிரதியை பகிர்ந்து கொண்டார்.
இது சீக்கிய பாரம்பரியத்தையும், பஞ்சாபி மொழியையும் போற்றுகிறது. லடாக்கில் உள்ள ஹெமிஸ் மடாலயம், திபெத்திய கையெழுத்து பிரதிகளை பகிர்ந்து வருகிறது.
ஆரோக்கியத்தில் கவனம்
ஜூன் மத்தி வரை இந்த சர்வே தொடர்ந்து நடக்கவுள்ளதால், நம் கலாசாரத்தை பகிரும் பணியில் மக்கள் ஈடுபட வேண்டும்.
சர்வதேச யோகா தினத்திற்கு, 100 நாட்களே எஞ்சி இருக்கின்றன. எனவே, மக்கள் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சர்க்கரை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே நான் கூறியபடி, சமையல் எண்ணெயின் பயன்பாட்டையும், 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள்.
இப்படியான முயற்சிகள் உடல் பருமன் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
