புதுடில்லி: டில்லியில், ‘டேட்டிங் ஆப்’பில் பழகிய பெண்ணை சந்திக்க வந்த நபரை, அந்தப் பெண்ணின் கூட்டாளிகள் கடத்திச் சென்று, 7 லட்சம் ரூபாய் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியைச் சேர்ந்த அனுரூப் நருலா என்பவர், ‘3 எப்’ என்ற டேட்டிங் ஆப் மூலம் இளம்பெண் ஒருவரிடம் பழகினார்.
தன்னை சந்திக்க கல்காஜியில் உள்ள நேரு பிளேஸ் பகுதிக்கு வரும்படி, அனுரூப் நருலாவுக்கு அந்த பெண் அழைப்பு விடுத்தார். இதன்படி சமீபத்தில் அங்கு அவர் சென்றார்.
அப்போது, அந்த பெண்ணுடன் வந்த மூன்று பேர், அனுரூப்பை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர். தெற்கு டில்லி மற்றும் குருகிராமில் சுற்றித்திரிந்த அவர்கள், காரில் வைத்து அனுரூப்பை அடித்து உதைத்தனர்.
அவரை மிரட்டி ஆன்லைன் பணப் பரிமாற்றம், ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு மூலம், மொத்தம் 7 லட்சம் ரூபாயை பறித்தனர். பின், மறுநாள் காலை நேரு பிளேஸ் பகுதியில் அவரை இறக்கி விட்டு தப்பினர்.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், அனுரூப்பை கடத்தி பணம் பறித்த ஜெனி, நவ்ஜோத், சஞ்சய், ரிஷாப், சகில் சவுஹான் ஆகியோரை கைது செய்தனர்.
ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு, ‘சிசிடிவி’ காட்சிகளின் அடிப்படையில், இவர்களை போலீசார் கைது செய்தனர்.
