சண்டிகர்: சண்டிகரில் நடந்த ‘ரிலே’ போட்டியில் தமிழக அணி 5 தங்கம், 1 வெண்கலம் என 6 பதக்கம் கைப்பற்றியது.
பஞ்சாப்பின் சண்டிகரில், சர்வதேச இன்விட்டேஷனல், 3வது தேசிய ஓபன் ரிலே போட்டி நேற்று நடந்தது. 20 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் 4*400 மீ., கலப்பு ஓட்டத்தில், தமிழகத்தின் ரஞ்சித் குமார், கனிஸ்ரீ, தேஷிகா இடம் பெற்ற அணி (3 நிமிடம், 30.88 வினாடி) தங்கம் கைப்பற்றியது. சீனியர் 4*100 மீ., கலப்பு ஓட்டத்தில் இந்தியா ‘ஏ’ (3:18.90 நிமிடம்), இலங்கை (3:19.58) முதல் இரு இடம் பெற்றன.
ஜூனியர் பெண்களுக்கான 4*100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தாரணி, மதுமிதா, தேவ சஹானா, சுதர்ஷினி இடம் பெற்ற அணி தங்கம் (48.38) வென்றது. ஆண்களுக்கான ஓட்டத்தில் தமிழக வீரர்கள் வீரகுமார், ஹரிஷ், ஞானசுந்தர், சிவகுமார் இடம் பெற்ற அணி தங்கம் (41.58) வசப்படுத்தியது. சீனியர் பிரிவில் வருண் மனோகர், மானவ், கரண், அகேலான் நாகராஜ் அடங்கிய தமிழக அணி வெள்ளி (40.71) வென்றது.
ஜூனியர் பெண்களுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் எட்வினா, தேஷிகா, தியா அடங்கிய தமிழக அணி (3:46.73) தங்கம் கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் நகுல் பிரபு, ராமஜெயம், சந்துரு, ரஞ்சித் குமார் இடம் பெற்ற அணி தங்கம் (3:12.89) வென்றது.
பெண்களுக்கான சீனியர் 4*100 மீ., ஓட்டத்தில் இந்தியா ‘ஏ’ (44.18 வினாடி) தங்கம் வென்றது. தமிழக அணி (யாமினி, பவித்ரா, கவுசல்யா, பிரதிபா, 46.78) வெண்கலம் வென்றது.
ஆண்களுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் மானு, ஆமோஜ் ஜேக்கப், தரம்வீர், ராஜேஷ் ரமேஷ் இடம் பெற்ற இந்திய ‘ஏ’ அணி தங்கம் (3 நிமிடம், 01.43 வினாடி) தங்கம் வென்றது. தமிழகத்தின் பரத், ஷரண், சுராஜ், கவினேஷ் இடம் பெற்ற அணி வெண்கலம் (3:07.59) தட்டிச் சென்றது. ஒட்டுமொத்தமாக தமிழக அணிக்கு 5 தங்கம், 1 வெண்கலம் என 6 பதக்கம் கிடைத்தன.
