மாமியார் அடித்து கொலை: மருமகன் கைது

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்பத் தகராறில், மாமியாரை அடித்து கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்..

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி தனலட்சுமி, 65; இவர், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பாவந்துாரில் உள்ள தனது மகள் மீனா வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் மகள் மீனாவிற்கும் மருமகன் சிவாவிற்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சிவா ஆத்திரமடைந்து மீனாவைத் தாக்கினார். அதனை தடுக்க சென்ற மாமியார் தனலட்சுமியையும் தலையில் தாக்கினார். இதில், தனலட்சுமி மயங்கி விழுந்தார்.

உடன், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்தபோது, தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

மேலும் படுகாயமடைந்திருந்த மீனாவை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து மாயவன் மகன் சிவாவை, 30; கைது செய்தனர்.

Source link