சென்னை: ‘புதுச்சேரியில் தி.மு.க.,வுக்கு 8 சதவீத ஓட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணிக்கு தலைமை தாங்குவது நல்லதல்ல’ என, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., – காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. அதுபோல், புதுச்சேரியிலும் தி.மு.க., – காங்., கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. ஆனால், அக்கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரசுக்கு அழைப்பு இல்லை.
புதுச்சேரியை பொறுத்தவரை, காங்கிரஸ் தான் பெரிய கட்சி. கடந்த 2016ல், ‘இண்டி’ கூட்டணியில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைத்தது. ஆனால், தங்களை அழைக்காமல், கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க., ஆலோசனை நடத்தியது, காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கூட்டணிக்கு தலைமை வகிக்க, தி.மு.க., நினைக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் தான், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும். இந்த வழக்கத்தை மாற்ற நினைப்பது சர்வாதிகாரம் என, காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் தி.மு.க.,வின் நிலைப்பாட்டை, தமிழக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘புதுச்சேரியில் 8 சதவீத ஓட்டுகள் வைத்துள்ள தி.மு.க., கூட்டணிக்கு தலைமை தாங்குமா; இல்லை, 26 சதவீத ஓட்டுகள் வைத்துள்ள காங்கிரஸ் தலைமை தாங்குமா? ‘கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை ஏன் இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லதல்ல’ என தெரிவித்துள்ளார்.
