பல்வேறு முதலீட்டு வழிமுறைகள் பற்றி தொடர்ந்து பார்த்து வந்தோம். இப்போது இந்த தொடரின் இறுதி அத்தியாயமாக காப்பீடு பற்றி சுருக்கமாக பார்ப்போம். காப்பீடு என்றவுடனே பலருக்கும் ஒருவித அலட்சியம் ஏற்படும். ‘எனக்கு என்ன ஆகும் என்று எனக்கு தெரியாதா? இதை பற்றி நீங்கள் என்ன சொல்லி தருவது’ என்று சிலர் கேட்பர்.
இன்னும் சிலரோ, ‘அந்த பணத்தை வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான முதலீடுகளில் ஈடுபடுத்தினால் நல்ல லாபம் ஈட்டலாம். எதற்கு ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு, அவர்கள் லாபமடைய, நாம் சிரமப்பட வேண்டும்’ என்றும் கேட்பர்.
‘இப்போது புதிய வரி திட்டம் வந்துவிட்டது. இனிமேல் இன்சூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தை காட்டி வருமான வரி சலுகை பெற முடியாது. அப்படியானால், பாலிசி எடுப்பதில் என்ன பலன் இருக்கிறது’ என்றும் ரொம்ப புத்திசாலித்தனமாக கேட்பர்.
‘எனக்கு தான் சொந்த வீடு இருக்கிறதே, எதிர்கால பாதுகாப்புக்கு அந்த வீடு போதுமே, ஏன் பாலிசி எடுக்க வேண்டும்’ என்றும் சொல்லக்கூடியவர்களும் உண்டு.
இவையெல்லாவற்றையும் மீறி, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் சில உள்ளன. பாலிசி எடுப்பது வருமான வரி சலுகை பெறுவதற்காக உருவானது அல்ல. அவசர சூழ்நிலை ஏற்படுமானால், உங்கள் வீட்டை விற்று, பணத்தை எடுக்கவும் முடியாது. அந்த நேரத்தில் கைகொடுப்பவை காப்பீட்டு பாலிசிகள் தான்.
பலரும், ‘கடைசி காலத்தில் சங்கரா, சங்கரா’ என்று சொல்வது போல், பிரச்னைகள் ஏற்பட்ட பின்னர் வருந்துவர். முன்னதாகவே செய்யவேண்டிய பணிகளை விட்டுவிட்டு, பிரச்னை வந்த பின்னர் அரற்றுவதினால் என்ன பயன் இருக்கப் போகிறது.
ஆயுள் காப்பீடு எது செய்கிறீர்களோ இல்லையோ, முதலில் ஆயுள் காப்பீடு எடுங்கள். வாழ்க்கை நிலையற்றது என்பதால், நம்மை நம்பியிருக்கும் குடும்பத்தினரின் எதிர்கால நிம்மதிக்கு ஆயுள் காப்பீடு மிக அவசியம். அலுவலகம் வழங்கும் காப்பீடு மட்டுமே போதாது; அதிகரித்து வரும் ஆயுட்காலம் மற்றும் நோய்களை கருத்தில் கொண்டு, நமக்கென தனியே ஒரு பாலிசி இருப்பது பாதுகாப்பானது.
அதையும் 25 முதல் 28 வயதுக்குள்ளேயே எடுத்துவிடுங்கள். அப்போது தான் அதற்கு செலுத்தும் பிரீமியம் குறைவாக இருக்கும். உங்கள் ஆண்டு வருமானம் போல் குறைந்தபட்சம் 20 மடங்கு அளவுக்கு கவரேஜ் இருப்பது போல் காப்பீடு எடுத்துக்கொள்ளுங்கள்.
மருத்துவ காப்பீடு இன்று மருத்துவ செலவுகள் கட்டுக்கடங்காமல் போய்விட்டன. கடந்த ஆண்டு இருந்த கட்டணம் இந்த ஆண்டு இருப்பதில்லை. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 15 சதவீத அளவுக்கு கட்டணங்கள் உயர்கின்றன. ஒரே ஒருமுறை குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் போதும். அத்தனை சேமிப்புகளும் கரைந்து போய்விடும் என்பது தான் இன்றைய யதார்த்தம். இந்நிலையில், மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள, மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியம்.
மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகிய அனைவருக்கும் சேர்த்து காப்பீடு எடுத்துக்கொள்ளுங்கள். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 15 லட்சம் வரை கவரேஜ் உள்ள மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.
தேர்வு எந்த காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வது என்பது அடுத்த கவலை. எண்ணற்ற நிறுவனங்கள் ஒரே மாதிரியாகவோ, அல்லது சிற்சில மாறுதல்களோடு தான் காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. ஒன்றைவிட மற்றொன்று சிறப்பானது போல தோன்றலாம். ஆனால், இடர் நேரத்தில் பலன் கொடுப்பது எது என்பது தான் இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அதாவது, எந்த காப்பீட்டு நிறுவனத்தின் ‘கிளெய்ம் செட்டில்மென்ட் விகிதம்’ அதிகமாக இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். பாலிசி ஆவணத்தை முழுமையாக படித்துவிட்டே கையெழுத்து போடுவேன் என்று உறுதியாக இருங்கள். முக்கியமாக, ஒரு குறிப்பிட்ட பாலிசிக்குள் எந்தெந்த அம்சங்கள் அடங்கியுள்ளன, எவை அடங்கவில்லை என்பதை படித்து புரிந்துகொள்ளுங்கள்.
முடிந்தால் ஒருமுறை, பெரிய மருத்துவமனைகளில் உள்ள காப்பீட்டு பிரிவில் வேலைசெய்பவர்களோடு போய் பேசி பாருங்கள். மருத்துவமனைகள் வைத்திருக்கும் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள், வரையறைகள் காரணமாக, பல பாலிசிகள் உபயோகமாவதில்லை. கையைவிட்டு செலுத்த வேண்டிய தொகை தான் அதிகமாக இருக்கும்.
காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே பெரிய போரே நடந்துகொண்டிருக்கிறது. காப்பீட்டின் வாயிலாக, மருத்துவமனைகளை கட்டுப்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதனாலேயே, காப்பீட்டுக்குள் வராத பல கட்டணங்களை மருத்துவமனைகள் தொடர்ந்து விதித்து வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
இவை இரண்டுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், தேவைக்கேற்ப மருத்துவ வசதிகளை பெறுவதற்கான காப்பீடு பாலிசிகள் என்னென்ன என்பதை அறிந்துகொண்டு அதன் பிறகு பாலிசிகளை எடுங்கள்.
தெளிவு ஒரு விஷயத்தில் தெளிவாக இருங்கள். காப்பீடும் முதலீடும் வேறு வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். இன்றைக்கு இவை இரண்டையும் இணைத்து விற்போரே அதிகம். வாழ்க்கை முழுதும் மருத்துவ செலவே இல்லை, பாலிசியை பயன்படுத்தவே இல்லை என்றால், கட்டிய பணம் பிற்காலத்தில் திரும்பிவிடும் என்ற நப்பாசை வார்த்தைகளை சொல்லியே இத்தகைய பாலிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
உண்மையில், இதற்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் மிக மிக அதிகம். மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் முதலீட்டில் ஈட்டி தரும் வருவாய் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.
அதனால், முதலில் சாதாரணமாக ஆயுள் காப்பீடை வாங்கிக்கொள்ளுங்கள். அதை முதலீட்டோடு சேர்த்து குழப்பிக்கொள்ளாதீர்கள்.
