வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக துவங்கிய போரால், உள்நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்ததை கண்டித்தும், கடுமையான குடியேற்ற கொள்கை, மன்னர் ஆட்சி போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், ‘நோ கிங்ஸ்’ என்ற பெயரில், அமெரிக்கா முழுதும் லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
அ மெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டை மட்டுமே பூர்த்தி செய்துள்ளார். அதற்குள் உலக நாடுகளுக்கு வரி விதிப்பு, விசா கட்டுப்பாடு, குடியேற்ற கொள்கை, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றது, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது, ஈரான் மீதான் போர் என, தினமும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வரு கிறார்.
அவரது முடிவுகள், உலக நாடுகளை மட்டுமின்றி, சொந்த நாட்டு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
டிரம்பின் ஆட்சி, மன்னர் ஆட்சி போல இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதைக் கண்டித்து, ‘நோ கிங்ஸ்’ என்ற போராட்ட இயக்கத்தை துவக்கினர்.
இந் த இயக்கத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு அமைப்பினரும் இணைந்துள்ளனர். ‘நோ கிங்ஸ்’ இயக்கத்தின் முதல் போராட்டம் கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது.
இரண்டாவது போராட்டம் அக்டோபரில் நடந்தது. இரு போராட்டங்களிலும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா துவங்கிய போர் காரணமாக மீண்டும், ‘நோ கிங்ஸ்’ இயக்கத்தினர் நேற்று சாலைகளில் திரண்டு போராடினர். அமெரிக்காவின், 50 மாகாணங்களில், 3,100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போராட்டம் நடந்தது.
பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் மக்கள், அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மினசோட்டா மாகாணம் இந்த போராட்ட இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்தது. இங்கு கடந்த ஜனவரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி, குடியேற்றம் மற்றும் சுங்க அதிகாரிகள் இருவரை சுட்டுக்கொன்றனர்.
இதனால் தலைநகர் செயின்ட் பாலில் உள்ள மாகாண சட்டசபை வளாகத்தை முற்றுகையிட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இந்த போராட்டங்கள் ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளன.
