மதுரை: மதுரை மத்தி தொகுதியை, புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கியதை, உள்ளூர் அ.தி.மு.க.,வினர் விரும்பவில்லை. அதிலும், நடிகை குஷ்பு கணவர் சுந்தர்.சி. போட்டியிட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை மத்தி தொகுதியில், அ.தி.மு.க., போட்டியிட முடிவு செய்து, தேர்தல் பணிகளை, அ.தி.மு.க.,வினர் துவக்கினர். தொகுதியை பெற, அ.ம.மு.க., – பா.ஜ., கட்சிகளும் முயன்றன. அ.ம.மு.க.,வினரும், தங்களுக்கு ஒதுக்கும் 11 தொகுதிகளில், மதுரை மத்தி இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், மதுரை மத்தி இடம் பெறாததால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அ.தி.மு.க.,வில் நிர்வாகிகள் சிலர் ‘சீட்’ பெற, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசினர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், மதுரை மத்தி தொகுதியை, புதிய நீதிக்கட்சிக்கு பழனிசாமி ஒதுக்கி விட்டார். அக்கட்சியின் வேட்பாளராக, நடிகை குஷ்புவின் கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி போட்டியிடுகிறார்.
மதுரை மத்தியில், புதிய நீதிக்கட்சிக்கு செல்வாக்கு இல்லாதபோது, சென்னையில் வசிக்கும் சுந்தர்.சிக்கு சீட் ஒதுக்கியது, அ.தி.மு.க.,வினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ‘கடந்த சட்டசபை தேர்தலில், திடீரென பசும்பொன் தேசிய கழகத்திற்கு மதுரை மத்தி தொகுதியை ஒதுக்கினர். தற்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், புதிய நீதிக்கட்சிக்கு கொடுத்திருக்கின்றனர். எங்கள் எதிர்ப்பை கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம்’ என்றனர்.
