வாஷிங் மிஷின், பிரிஜ், மிக்ஸி, 'டிவி' வாங்க 8,000 ரூபாய்க்கான இல்லத்தரசி கூப்பன்! தேர்தல் வாக்குறுதியாக ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ”தமிழகத்தில் வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, வாஷிங் மிஷின், மிக்ஸி, பிரிஜ், மைக்ரோவேவ் அவன், ‘டிவி’ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க, தலா 8,000 ரூபாய் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும்,” என, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை அறிவாலயத்தில் நேற்று, தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஏழா வது முறை தி.மு.க., ஆட்சி அமைய இருக்கிறது. இந்த நம்பிக்கை கட்சியினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இருக்கிறது.

ஏன் என்றால், இதுவரைக்கும் எந்த மாநில அரசும், தி.மு.க., அரசின் சாதனைகளை நிகழ்த்தியதில்லை என பெருமையாக சொல்லும் வகையில், ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துஇருக்கிறோம்.

அதனால் தான், நம் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை; மறைக்கவும் முடியவில்லை. நாட்டிலேயே, ‘டபுள் டிஜிட்டல்’ பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்க நினைக்கிற கூட்டம் தான் தி.மு.க.,வை எதிர்க்கிறது. அவர்களும் ஏராளமான பொய் செய்திகளை பரப்பி பார்த்தனர். அது எதுவும், தமிழக மக்களிடம் எடுப்படவில்லை. தற்போது ஒட்டுமொத்த தமிழ க மக்கள் எண்ணம் என்னவென்றால், தி.மு.க., ஆட்சி கட்டமைத்துள்ள வளர்ச்சி பாதையில், தமிழகம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

தமிழகம் தலை நிமிர்ந்த மாநிலமாக எப்போதும் இருக்க வேண்டும். தமிழகம் காக்க, கல்வியையும், உள்கட்டமைப்பையும் வளர்க்க, சமூக நீதி தழைக்க, இதுவரை அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பாதுகாக்கும் ஆட்சி தொடர வேண்டும். ‘தி.மு.க.,வின் 2.0’ ஆட்சி அமைய வேண்டும். இதுதான் தமிழக மக்களின் உறுதியான எண்ணம்.

சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து காட்டிய, கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியை விஞ்சக் கூடிய அளவுக்கு, தி.மு.க.,வின் 2.0 ஆட்சி இருக்கும். அதற்கு அடித்தளமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ைஹலைட்’ அறிவிப்புகளை மட்டும் இப்போது வெளியிடுகிறேன்.

* வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க, இல்லத்தரசிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.

இந்த கூப்பனை பயன்படுத்தி, வாஷிங் மிஷின், டிவி, பிரிஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பெருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக் கொள்ளலாம்

* மகளிர் உரிமைத்தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்

* பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும். கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்

* வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவியாக, 1,000 குழந்தைகள் காப்பகம் உருவாக்கப்படும்

* உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘மைக்’ கோளாறு

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உள்ள சாரம்சங்களை, ஹீரோ, ஹீரோயின், சூப்பர் ஸ்டார் என வர்ணித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவர் கையில் இருந்த மைக் வேலை செய்யவில்லை. ஓரிரு நிமிடங்கள் வரை அமைதி நிலவியது. மைக் சரி செய்யப்பட்டதும், மீண்டும் முதல்வர் பேச்சை துவக்கினார்.
தேர்தல் அறிக்கையில் உள்ள இலவச அறிவிப்புகளை வெளியிடும் போது, அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றனர். தேர்தல் அறிக்கை தயாரித்த குழுவினர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, பொதுச்செயலர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

Source link