தென் மாவட்டத்தின் முக்கிய அமைச்சராக பார்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்திருக்கிறது தி.மு.க., தலைமை. மறுக்கப்பட்டதற்கான காரணங்களாக கனிமவள கடத்தல், பால்வளத் துறையில் நடந்ததாக சொல்லப்படும் முறைகேடுகள், பெண்கள் பிரச்னை என கட்சியினர் அடுக்குகின்றனர்.
ஆனால், மத ரீதியான செயல்பாடுகளும், பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சித்ததுமே காரணம் என உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தனக்கு சீட் அறிவிக்கப்படவில்லை என்றதும், த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவை சென்னை போயஸ் கார்டன் வீட்டில் நேற்று முன்தினம் இரவே மனோ தங்கராஜ் சந்தித்திருக்கிறார்.
‘உடனே கட்சியில் இணைகிறேன். எனக்கு பத்மநாபபுரம் தொகுதியிலும், என்னுடன் வருவோருக்கு கிள்ளியூர், குளச்சல், மதுரை மத்தி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் சீட் கொடுங்கள்’ என கேட்டு பேரம் பேசினார்.
இந்த விஷயத்தை, கட்சியின் பொதுச்செயலர் ஆனந்திடம் கொண்டு சென்றார் ஆதவ் அர்ஜுனா. ‘அவரை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். இப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு முன், அவரை அமைச்சரவைப் பொறுப்பில் இருந்து கழற்றி விட்டதும், த.வெ.க.,வை நோக்கி தான் ஓடி வந்தார்.
‘அவரை நம்பி, கட்சித் தலைவர் விஜயிடம் பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். ஆனால், அதை காட்டி தி.மு.க., தலைமையை மிரட்டி, மீண்டும் அமைச்சராகி விட்டார். அதனால், அவரை கட்சியில் சேர்க்க வேண்டாம்’ என்று ஆனந்த் சொல்லி விட்டார்.
இதையடுத்து, மனோ தங்கராஜை த.வெ.க.,வில் சேர்க்கும் முயற்சியை ஆதவ் அர்ஜுனா கைவிட்டு விட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.
