வழக்கமாக நீதிமன்றங்கள் என்றாலே காலை 10 மணியோ அல்லது 10.30க்கோ துவங்கி மாலை 4 அல்லது 5 மணிக்கு பணிகள் முடிந்துவிடும். உச்ச நீதிமன்றம் காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. மாலை 4 மணிக்கு வேலை முடிந்துவிடும். சில சமயம் மாலை 6 மணி வரை கூட சில நீதிபதிகள் வழக்குகளை விசாரித்துள்ளனர்.
ஆனால் விடியற்காலை 3.20க்கு உலகத்தின் எந்த கோர்ட்டிலாவது விசாரணை நடந்துள்ளதா? நம் உச்ச நீதிமன்றம் விடியற்காலை விசாரணையை நடத்தி உலக சாதனை புரிந்துள்ளது. இந்த விடியல் விசாரணையை ரிப்போர்ட் செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. எனக்கு கிடைத்தது. இதைப்பற்றித்தான் இந்த கட்டுரை.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு
1993 மார்ச் 12ம் தேதி மும்பையில் பல இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தியது தாவூத் இப்ராஹீம், டைகர் மேமன் மற்றும் முகமது தோசா. இவர்களுக்கு உதவியது யாகூப் மேமன். 1992 டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இதையடுத்து மும்பையில் மதக்கலவரங்கள் ஏற்பட்டன. இந்த கலவரங்களில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டதற்கு பழி வாங்கவே 1993ல் மும்பையில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது. முக்கிய குற்றவாளிகளான தாவூத், டைகர் மேமன் மற்றும் முகமது தோசா ஆகியோர் இப்போது கராச்சியில் உள்ளனர். இவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை சர்வதேச காவல்துறையான இண்டர்போல் பிறப்பித்துள்ளது. ஆனால் இவர்கள் இன்றுவரை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ பாதுகாப்பில் உள்ளனர்.
தூக்கு தண்டனை
2007ல் இந்த வழக்கு தடா கோர்ட்டால் விசாரிக்கப்பட்டு 12 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதில் கடைசியாக 3 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவரான தாகிர் மர்ச்சண்ட் வழக்கு நிலுவையில் இருந்த போதே மாரடைப்பால் சிறையில் காலமானார்.
யாகூப் மேமனுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஒருவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அவர் மறு ஆய்வு மனு அதாவது ரிவ்யூ பெடிஷன் தாக்கல் செய்யலாம். அதுவும் தள்ளுபடி என்றால் கடைசியாக ஒரு வாய்ப்பு உண்டு. அது மறு சீராய்வு மனு அதாவது கியூரேடிவ் பெடிஷன். மறு ஆய்வு மனுக்கள் 99% நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதில்லை.
நீதிபதிகள் அவர்களுடைய சேம்பரில் வழக்குகளின் கோப்புகளைப் படித்து முடிவெடுப்பார்கள். ஒரு சில மறு ஆய்வு மனுக்கள் ஓப்பன் கோர்ட் விசாரணைக்கு வந்துள்ளன.அப்பீலில் எந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களோ அவர்கள்தான் மறு ஆய்வு மனுக்களின் மீதும் தீர்ப்பு வழங்குவார்கள். இதனால் 99% இந்த மனுக்கள் தள்ளுபடியாகும்.
ஆனால் மறு சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதியும், ஏற்கெனவே தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் இணந்து விசாரிப்பார்கள். இதுவும் பெரும்பாலும் நீதிபதிகளின் சேம்பரிலேயே முடிவாகும். லட்சத்தில் ஒரு வழக்கு ஓப்பன் கோர்ட் விசாரணைக்கு வரும். யாகூப் மேமனின் சீராய்வு மனு மற்றும் மறு சீராய்வு மனுக்கள் இரண்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன.
பிரபலங்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளின் வேண்டுகோள்
பிரபலங்கள் 300 பேர் ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பினர். யாகூப் மேமன் 20 வருடங்களாக சிறையில் உள்ளார்…அவருடைய மனநிலை சரியில்லை…எனவே அவருடைய தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். முன்னாள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகள், சீனியர் வக்கீல்கள் சில என இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.
இங்கே ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும்.
நீதிமன்றம் ஒரு வழக்கில் அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து, இரு தரப்பின் வாதங்களையும் கேட்டு இறுதி முடிவெடுத்த பிறகு அதை மாற்றுங்கள் என சொல்வதற்கு இவர்கள் யார்? இவர்களும் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள். இந்த மாதிரியான மனுக்கள் சமர்ப்பிப்பது இப்போது ஒரு பேஷனாகிவிட்டது.
சமீபத்தில் ஒரு முக்கிய விவகாரத்தில் இதே போல முன்னாள் நீதிபதிகள் ஒரு வேண்டுகோள் வைக்க, உடனே இன்னொரு கோஷ்டி இது தவறு என முன்னாள் நீதிபதிகளுக்கு எதிராக ஒரு மனு சமர்ப்பிக்கின்றனர். ஜனநாயக நாடு என்றால் எதையும் செய்யலாம் போலிருக்கிறது.
மரண உத்தரவு, மீண்டும் உச்சநீதிமன்றம்
இப்படி யாகூப் மேமனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் தடா கோர்ட் மேமனுக்கு டெத் வாரண்ட் எனப்படும் மரண உத்தரவை பிறப்பித்தது. அதன்படி ஜூலை 30ம் தேதி காலை மேமன் தூக்கிலிடப்படுவார் என அந்த மரண உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே மீண்டும் மேமன் தரப்பில் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேமனின் மறு சீராய்வு மனு விசாரணையில் சில நடைமுறைகள் பின்பற்றவில்லை…. தவிர, இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பாகவே டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
எனவே தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. உடனே ஜூலை 29ம், 2015ல் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் 4ம் எண் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி. பந்த் மற்றும் அமிதவ ராய் அடங்கிய அமர்வு விசாரித்தது. காலை முதல் மாலை 4.15 வரை விசாரணை நடைபெற்றது. கோர்ட்டில் உட்கார இடமே இல்லை. அந்த அளவிற்கு வக்கீல்கள், விசிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என ஏகப்பட்ட கூட்டம். நாள் முழுக்க நின்று கொண்டே நோட்ஸ் எடுக்க வேண்டியதாயிற்று.
கடைசியில் மேமனின் மனுவை தள்ளுபடி செய்து மரண தண்டனையை மறுநாள் காலை நிறைவேற்றலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு வழியாக மேமனின் வழக்கு முடிந்தது. உடனே ப்ளாஷ் செய்திகள் டிவிக்களில் பறந்தன. நான் அலுவலகம் சென்று செய்தியை எழுதி எப்படி எடிட் செய்ய வேண்டும் என சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். நாள் முழுக்க நின்றுகொண்டேயிருந்ததால் சாப்பிட்டுவிட்டு சீக்கிரமே படுத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தோடு சாப்பாட்டை முடித்தேன்.
மீண்டும் ஒரு அவசர மனு
செல்போன் அலறியது. வக்கீல் நண்பர் ஒருவரின் போன். “ மேமன் சார்பில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்போகின்றனர். விசாரணை நடக்க வாய்ப்புள்ளது…நீ தயாராக இரு” என சொன்னார் நண்பர். மீண்டும் விசாரணையா? தலை சுற்றியது. என் ஹிந்தி ரிப்போர்ட்டருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன்.
உடனே அலுவலகத்திற்கு தெரிவித்து கேமரா மற்றும் அப்லிங் செய்யும் வேன் ஆகியவற்றை அனுப்பும்படி சொன்னேன். எங்கு அனுப்புவது என அலுவலகம் கேட்ட போது எனக்கு குழப்பம். இந்த இரவு நேரத்தில் எங்கே விசாரணை நடக்கும்? விடுமுறை நாட்களில் இப்படி அவசர மனுக்கள் நீதிபதி வீட்டில் விசாரிக்கப்பட்டுள்ளன. நீதிபதி தீபக் மிஸ்ரா வீட்டில் விசாரணை இருக்கலாம் என சொல்லி அந்த விலாசத்திற்கு அனுப்பும்படி சொன்னேன்.
குழப்பம்
இந்த விஷயம் பத்திரிகையாளர்களுக்கு தெரிய வர தொடர்ந்து போன் வந்த வண்ணமாக இருந்தது. நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீடு இருக்கும் சாலைக்கு சென்றேன். சில நிருபர்கள் நின்றிருந்தனர். புதிய அவசர மனு இன்னும் தாக்கல் செய்யவில்லை…இன்னும் சிறிது நேரத்தில் செய்துவிடுவார்கள் என தகவல் வந்தது. அப்போது மணி இரவு 10. நீதிபதி வீட்டு வாசலில் யாரும் நிற்க வேண்டாம் என டில்லி போலீசார் எங்களை தள்ளி போக சொன்னார்கள்.
இரவு நேரத்தில் மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? உச்ச நீதிமன்றம் மூடியிருக்குமே.. இப்படிப்பட்ட அவசர மனுக்கள் எந்த நேரத்திலும் தாக்கல் செய்ய வசதி உண்டு. இதற்கென ஒரு பதிவாளர் ஒதுக்கப்பட்டிருப்பார். அவருடைய வீட்டு போன், விலாசம் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பதிவாளர் வீட்டிற்கு மனு தாக்கல் செய்ய சென்றுள்ளனர் என என் ஹிந்தி ரிப்போர்ட்டர் சொன்னார்.
மணி 11 ஆயிற்று. எந்த தகவலும் இல்லை. நிருபர்களும் கேமராமேன்களும் சாலையில் நின்று கொண்டிருந்தனர். வெயில் காலம் என்பதால் ஓரிரு ஐஸ்கிரீம் தள்ளு வண்டிகளும் எங்கள் கூட்டத்தைப் பார்த்து அங்கு வந்துவிட்டன. வெறுமனே நிற்பதை விட ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என நிருபர்கள் தள்ளு வண்டிகளை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். 10 நிமிடங்களில் அனைத்து ஐஸ்கிரீமும் காலியானது.
மணி 11. தெருவிலேயே நின்று கொண்டிருந்தோம். மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என தகவல் வர, உடனே செய்தி ப்ளாஷ் ஆகியது. எங்கள் டிவி ஓபி வேன் அருகே நின்றிருந்தது. உடனே நான் லைவ் ஆக டிவியில் பேசினேன். என்ன நடக்கிறது என்பதை விவரித்தேன். எங்கு விசாரணை நடக்கும் என செய்தி வாசிப்பவர் கேள்விக்கு…அது குறித்து தலைமை நீதிபதிதான் விரைவில் முடிவெடுப்பார் என பதில் சொன்னேன். பதில் சொல்லிவிட்டாலும் எங்கு விசாரணை என்பது குழப்பமாகத்தான் இருந்தது.
வீடா? கோர்ட்டா?
நீதிபதி மிஸ்ரா வீட்டிற்கு உச்ச நீதிமன்ற கார் ஒன்று வந்தது. காரில் உச்ச நீதிமன்றம் என போட்டிருந்தது. உடனே நாங்கள் அனைவரும் கார் அருகே ஓடினோம். உள்ளே ஒரு அதிகாரி உட்கார்ந்திருந்தார். எங்கே ஹியரிங் நடக்கப்போகிறது என அனைவரும் ஒரு கோரஸாக கேட்டோம். காரின் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால் அவர் எதுவும் சொல்லவில்லை. பிறகுதான் தெரிந்தது – வந்தவர் ஒரு பதிவாளர் என்று. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் “நோட்” ஒன்றை எடுத்துக்கொண்டு வந்துள்ளார் என்று.
சிறிது நேரத்தில் அந்த கார் வெளியே வந்தது. மீண்டும் அனைவரும் ஓடினோம். காரின் கண்ணாடியைத் திறந்து ஒரு நிருபரிடம் ஏதோ சொன்னார் அந்த அதிகாரி. விசாரணை உச்ச நீதிமன்றத்தில்தான் நடைபெறும் என அந்த நிருபர் தகவலை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். மீண்டும் செய்தி ப்ளாஷ் ஆகியது…முதன் முறையாக உச்ச நீதிமன்றம் இரவில் கதவைத் திறந்து விசாரணைக்கு தயாராகிறது என செய்தி அனுப்பினேன். அத்தோடு லைவ் ஆக பேசவும் செய்தேன்.
பாஸ் எங்கே?
உச்ச நீதிமன்றத்தில் நிருபர்களுக்கென்று தனி பாஸ் உண்டு. அது இல்லாமல் உள்ளே போக முடியாது. நிருபரின் புகைப்படத்தோடு பெயர், மீடியா நிறுவனத்தின் பெயர் என அனைத்து விவரங்களும் அந்த பாஸில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு சாதாரண பேப்பரில்தான் அந்த பாஸ் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். எனவே அதை நாங்கள் லாமினேட் செய்து வைத்துக்கொள்வோம். 6 மாதத்திற்கு ஒரு முறை பாஸ் நீட்டிக்கப்படும். உடனே நானும் என் ஹிந்தி ரிப்போர்ட்டர் ஆஷிஷ் பார்கவாவும் அலுவலக காரில் உச்ச நீதிமன்றம் செல்ல ஆரம்பித்தோம்.
“சார் கோர்ட் பாஸ் எடுத்து வந்திருக்கிறீர்களா?” என ஆஷிஷ் கேட்க..என் ஷர்ட் பாக்கெட்டைத் தொட்டு பார்த்தேன். பாஸ் இல்லை. போச்சு…கோர்ட்டிற்குள் எப்படி நுழைவது? இரவு நேர விசாரணையை நான் பார்க்க முடியாதா? உடனே தலைமை நீதிபதியின் செயலருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். கவலைப்பட வேண்டாம்…செக்யூரிட்டி உங்களை உள்ளே விடுவார்கள்…நான் போன் செய்து சொல்லிவிடுகிறேன் என நம்பிக்கையோடு சொன்னார். இன்னொரு பக்கம் ஆஷிஷ் உச்ச நீதிமன்ற போலீஸ் அதிகாரியிடம் பேசினார்.
கோர்ட்டிற்குள்…
உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்த போது வாசலில் ஓபி வேன்கள் வரிசையாக சாலையில் நின்றிருந்தன. நடு இரவில் உச்ச நீதிமன்றம் விளக்குகள் வெளிச்சத்தில் பிரகாசமாக இருந்தது. கேமராமேன்கள் நீதிமன்ற புல்வெளியில் கேமராக்களை நிறுவி தயாரானார்கள். வானத்தில் நிலா வெளிச்சமாக தெரிந்தது. செக்யூரிட்டி கேட்டில் சென்றதும் என் பெயரைச் சொன்னதும்…உடனே அனுமதித்தார்கள். பிறகு 4ம் எண் கோர்ட்டிற்குள் நானும் ஆஷிஷூம் நுழைந்தோம். அப்போது செல்போன்களை கோர்ட்டிற்குள் எடுத்து செல்ல அனுமதியில்லை.
ஆனால் விடியற்கால விசாரணை என்பதால் கோர்ட் அறை வாசலில் இருந்த செக்யூரிட்டிக்கள் கண்டுகொள்ளவில்லை. சில வக்கீல்கள் உள்ளே பைல்களுடன் இருந்தார்கள். நாங்கள் பார்வையாளர் பகுதியில் அமர்ந்தோம். காலையில் இருந்ததைப் போல இப்போது கூட்டமே இல்லை. செல்போனை சைலண்ட் மோடில் வைத்துக்கொண்டோம். அப்போது மணி விடியற்காலை 1.30 – ஜூலை 30, 2015
என்ன நடந்தது?
இதற்கிடையே என்ன நடந்தது என்பது பின்னர்தான் எங்களுக்கு தெரிய வந்தது. யாகூப் மேமனின் கருணை மனுவை ஜனாதிபதி 29, 2015 இரவு 10.30 மணிக்கு நிராகரித்துள்ளார். அதாவது தூக்கு தண்டனை நிறைவற்றும் 30ம் தேதிக்கு முன்னர். அதன் பிறகு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடனே தலைமை நீதிபதிக்கு இந்த மனு குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். நடு இரவில் அதாவது விடியற்காலை 1 மணிக்கு மேமனின் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளும் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டனர். புதிய மனு குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
எங்கு வாதங்களை வைத்துக்கொள்வது? எந்த நீதிபதி வீட்டில் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது…வீட்டில் வைத்துக்கொண்டால் மீடியா உள்ளே விட முடியாது…என்ன வாதங்கள் முன் வைக்கப்பட்டன என மக்களுக்கு தெரியாமல் போய்விடும்..எனவே கோர்ட்டிலேயே விசாரணை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
விடியற்காலை 3.20க்கு வந்த நீதிபதிகள்
கோர்ட்டிற்குள் இருந்த நான் அரை மணிக்கு ஒரு முறை அறைக்கு வெளியே சென்று போன் மூலமாக லைவ் செய்து வந்தேன். என்ன நடக்கிறது? வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்றம் இப்படி நடு இரவு/விடியற்காலை திறக்கப்பட்டு விசாரணை நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி…நீதிபதிகள் வருகைக்காக அனைவரும் காத்திருக்கின்றனர் என சொல்லி வந்தேன். அடிக்கடி அலுவலகத்திற்கு கோர்ட்டிற்குள் யார் யார் உள்ளனர் எனவும் தகவல் தெரிவித்தேன். வழக்கமாக இரவு 11 மணிக்கு பிறகு டிவிக்களில் பழைய செய்திகளைத்தான் ஓட்டுவார்கள்.
லைவ் ஆக செய்தி படிக்க மாட்டார்கள். ஆனால் மேமன் வழக்கு ஒரு புதிய சாதனையே படைத்துள்ளதால் நடு இரவிலிருந்து அனைத்து சேனல்களும் லைவ் ஆக செய்திகளைக் காட்டிக் கொண்டிருந்தன. அப்போது அட்டார்னி ஜெனரலாக அதாவது மத்திய அரசின் தலைமை வக்கீலாக இருந்தவர் முகுல் ரோஹத்தகி. அவர் சுமார் விடியற்காலை 2.30 மணிக்கு வந்தார். கூடவே அவருடைய ஜூனியர்கள்.
நேரம் போய்க்கொண்டேயிருந்தது. கோர்ட் மாஸ்டர் அதாவது நீதிபதிகளின் உத்தரவுகளை சுருக்கெழுத்து மூலமாக நோட் எடுக்கும் அதிகாரி உட்பட இருவர் கோர்ட்டிற்கு வந்து நீதிபதிகள் அமரும் மேடைக்கு கீழே தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். திடீரென கோர்ட்டிற்குள் பரபரப்பு. மூன்று டவாலிகள் நீதிபதிகள் அமரும் மேடைக்கு வந்தனர். அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளதா? நீதிபதிகள் வரலாமா என அதிகாரிகளிடம் விசாரித்தனர். மணி விடியற்காலை 3.20. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி. பந்த் மற்றும் அமிதவ ராய் கோர்ட்டிற்குள் நீதிபதிகள் வரும் பின் பக்க வழியாக வந்தனர். டவாலிகள் மூவர் நீதிபதிகள் அமர நாற்காலிகளை சரிப்படுத்த மூவரும் அமர்ந்தனர்.
விசாரணை
உடனே விசாரணை தொடங்கியது. சீனியர் வக்கீல் ஆனந்த் குரோவர் யாகூப் மேமனுக்காக வாதாடினார். ஜூலை 28ம் தேதிதான் யாகூப் கருணை மனுவை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்….சட்டப்படி அவருக்கு 14 நாட்கள் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.
காரணம் மேமன் நீதிமன்றத்தை அணுகலாம்…அதற்காகத்தான் இந்த 14 நாட்கள் கால அவகாசம் சட்டத்தால் கொடுக்கப்பட்டுள்ளது…எனவே மேமனின் தூக்கு தண்டனையை 14 நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என வாதிட்டார் குரோவர். இதற்கு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி பதிலளித்தார்.
யாகூப் விவகாரத்தில் அவருடைய சகோதரர் தாக்கல் செய்த முதல் கருணை மனு ஏப்ரல் 2014ல் ஜனாதிபதியால நிராகரிப்ப்பட்டது…அதன் பின் அவருக்கு நிறைய கால அவகாசம் இருந்தது என்றார் ரோஹத்கி. உடனே குரோவர் எழுந்து….முதல் கருணை மனுவை மேமன் சமர்ப்பிக்கவில்லை என்றார்.
அதற்கு ரொஹத்கி…யாகூப்பின் சகோதரர் அந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்…குரோவரின் வாதத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டால்…அடிக்கடி யாகூப் கருணை மனுவை சமர்ப்பிக்கலாம்…இதற்கு ஒரு முடிவே இருக்காது..எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
உடனே மூன்று நீதிபதிகளும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். கோர்ட்டில் அமைதி நிலவியது…ஒரு வேளை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா? நீதிபதி மிஸ்ரா அட்டார்னி ஜெனரலிடம் கேட்டார்…”ஜனாதிபதி மேமனின் கருணை மனுவை நிராகரித்துவிட்டார் என்கிற விஷயம் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் தெரிவிக்கப்பட்டதா?” “நேற்று இரவு 29 ஜூலை 11 மணிக்கு மேமனுக்கும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது” என பதில் அளித்தார் முகுல்.
பிறகு மூன்று நீதிபதிகளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். 5 நிமிடங்களானது. இதையெல்லாம் ப்ளாஷ் செய்தியாக அலுவலகத்திற்கு போனில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். விடியற்காலை மணி 4.40. நீதிபதி மிஸ்ரா…கோர்ட் மாஸ்டரை நோக்கி, “ டேக் டவுன் த ஆர்டர்” என சொன்னார். உடனே கோர்ட்டில் பரபரப்பு…நோட் புக், பேனா திறக்கும் சத்தங்கள்… நீதிபதி மிஸ்ரா உத்தரவை டிக்டேட் செய்ய ஆரம்பித்தார்.
முடிந்தது
சுமார் 15 நிமிடங்கள் இந்த மனு எப்போது விசாரணைக்கு வந்தது? இதன் பின்புலம் என்ன? இரு தரப்பு வாதங்கள் என அனைத்தையும் டிக்டேட் செய்தார் நீதிபதி மிஸ்ரா. இனிமேல் தீர்ப்பு என்ன என்பதை அவர் சொல்ல வேண்டும்… உடனே தீர்ப்பின் இறுதி கட்டம் இப்போது என அலுவலகத்திற்கு போனில் தகவல் அனுப்பினேன்.
ஆவலாக அனைவரும் காத்திருந்தோம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதி சொல்ல…உடனே தகவல் அனுப்பினேன்…நிருபர்கள் வெளியே ஓடினார்கள். அலுவலகத்திலிருந்து எனக்கு போன் மூலம் லைவ்…நடந்த விஷயங்களை விலாவாரியாக சொல்லிவிட்டு யாகூப் மேமனின் மனு தள்ளுபடி..அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என விவரித்தேன்.
முகுல் ரோஹத்ஹி வெளியே வந்து காரில் ஏறப்போனார். உடனே அவரிடம் வழக்கு குறித்து கேட்டேன்.. “ இது ஒரு வெற்றியோ தோல்வியோ கிடையாது…இது சட்ட ரீதியான செயல்முறை..எந்த ஒரு விஷயமும் முடிவிற்கு வர வேண்டும். நான் என் வேலையை செய்துள்ளேன் அவ்வளவுதான்” என்றார். இதை என் செல்போனில் ரிகார்ட் செய்து அலுவலகத்திற்கு அனுப்பினேன்..அது ஒளிபரப்பப்பட்டது. வெளியே புல்வெளியில் நிருபர்கள் காத்திருந்தனர். ஆனந்த் குரோவர் கேமராக்களின் முன் நின்று வாதங்கள் குறித்தும் தீர்ப்பு குறித்தும் பேசினார்.
ஒரு நிருபர் அவரிடம் கேட்டார்…”நீங்கள் தீவிரவாதிகளுக்குதான் ஆஜராவீர்களா?” என்று கேட்டார். ஒரு கணம் அந்த நிருபரைப் பார்த்துவிட்டு உடனே தன் பேச்சை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார் குரோவர். ஜூலை 30 காலை 6.30 மணியளவில் நாக்பூர் மத்திய சிறையில் தூக்கிலப்பட்டார் யாகூப் மேமன்.
– அ.வைத்தியநாதன்

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
