சொந்த சின்னத்தால் தான் கட்சிகள் வாழ முடியும்
– அர்ஜுனராஜ், அவைத் தலைவர், ம.தி.மு.க.,
ம. தி.மு.க., சந்தித்த 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இருந்து, கடந்த 2016 சட்டசபை தேர்தல் வரை, தனி சின்னத்தில் தான் போட்டியிட்டோம். மாநில கட்சி அங்கீகாரத்தையும் பெற்றோம். கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் தான், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டது.
வேறு கட்சி சின்னத்தில் போட்டியிடும் கட்சியை, தேர்தலில் போட்டியிடவில்லை என்றே தேர்தல் கமிஷன் கணக்கில் எடுத்துக் கொள்ளும். தொடர்ந்து இரண்டு, மூன்று தேர்தல்களில் போட்டியிடாவிட்டால், கட்சி பதிவையே நீக்கி விடுவர்; கட்சியே இருக்காது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாவிட்டால், கட்சிக்கு நிதி வசூல் செய்வதிலேயே சிக்கல் ஏற்படுகிறது. வசூல் செய்யும் பணத்திற்கு, வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதனால்தான் தனி சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக நின்றோம். முடிந்த வரை வலியுறுத்தினோம்.
கடந்த லோக்சபா தேர்தலில், தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு, 4 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றோம். தமிழக மக்கள் மிகத் தெளிவானவர்கள். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்கின்றனரோ, அந்த கட்சிக்கு, அந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுவர். எனவே, சொந்த சின்னத்தில் போட்டியிடுவது, வெற்றி வாய்ப்பை பாதிக்காது.
எங்கள் சின்னத்தையே கட்சிகள் விரும்புகின்றன
– காசிமுத்து மாணிக்கம், வர்த்தகர் அணி செயலர், தி.மு.க.,
உ தயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு, கூட்டணி கட்சிகளை தி.மு.க., வற்புறுத்தவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, சிறிய கட்சிகள் விரும்புகின்றன. சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்பும் கட்சிகளை, முதல்வர் ஸ்டாலின் கட்டாயப்படுத்தவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியில், ம.தி.மு.க., தனி சின்னத்தில் போட்டியிட விரும்பியபோது, அதை தி.மு.க., ஏற்றுக் கொண்டது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வி.சி.க., 2024ல், இரு தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட்டுமாநில கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதற்கும் தி.மு.க.,வின் பெருந்தன்மைதானே காரணம்.
எல்லா கட்சிகளுக்குமே, தேர்தலில் வெற்றி மட்டும்தான் இலக்கு. சிறிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி, எதிரணிக்கு சாதகமாகி விடும் வாய்ப்பு உள்ளது.
அதனால், ஒரு தொகுதி, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் சிறிய கட்சிகள், தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதில்லை.
இதுதான் காரணமே தவிர, தி.மு.க., யாரையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தவில்லை.
