“திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் வழங்கப்பட்டது பற்றி விசாரணை கமிஷன் அமைப்போம்” – இபிஎஸ் | “We will set up a commission of inquiry into the provision of substandard laptops during the DMK regime” – EPS

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தளவாய் சுந்தரம், கிள்ளியூர் த.மா.க வேட்பாளர் நிவின் சைமன் மற்றும்  பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆரல்வாய்மொழி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வேளாண்மை, அடுத்தது மீன்பிடித் தொழில், பிறகு ரப்பர் தோட்டம் – இந்த மூன்றும்தான் மையமாக வைத்து இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நானும் ஒரு விவசாயியாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றேன். ​

விவசாயம் என்பது கடினமான பணி. மீன்பிடித் தொழில் சாதாரண தொழில் அல்ல. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வீடு திரும்பினால்தான் அவர் நிச்சயம். அப்படிப்பட்ட ஆபத்தான  மீன்பிடித் தொழில் ஈடுபட்டிருக்கின்ற மீனவர் நண்பர்கள், அவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அ.தி.மு க ஆட்சியில் நிறைவேற்றிருக்கிறோம்.

இந்தப் பகுதியிலே ரப்பர் தோட்டம் அதிகமாக இருக்கின்றது. அதன் மூலமாக விவசாயப் பெருங்குடி மக்கள் அதைப் பயிரிட்டு இன்றைக்கு அதிலே வாழ்வாதாரம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் தொழிலும் சிறக்க அ.தி.மு.க ஆட்சி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

2017-ஆம் ஆண்டு இந்த மாவட்டத்திலே ஒகி புயல் தாக்கியது. உடனடியாக அந்தப் பாதிப்புள்ளான பகுதிகளை நாங்கள் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அந்தப் பாதிப்புக்குள்ளானவர்கள், மீனவ சமுதாயத்தில் இறந்த குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமா கொடுத்தோம்.

சில பேர் காணாமல் போனார்கள், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு 18 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டு அதற்கான நடவடிக்கை எடுத்தோம். 31,000 மீனவர்கள் வாழ்வாதார நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2,500 ரூபாய் வழங்கினோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலக்கட்டத்தில்தான் கச்சத்தீவைத் தாரைவார்த்தது தி.மு.க அரசு. 

எடபாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி

எடபாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து அதிகமாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. அ.தி.மு.க ஆட்சியில் இரண்டு இடங்களிலே அரசு கலை கல்லூரியைக் கொடுத்தோம்.  2011 முதல் 2021 வரை 10 ஆண்டில் தமிழ்நாட்டில் 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் கொடுத்தோம்.

21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகளைக் கொடுத்தோம். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில்கூட நான்கு ஆண்டுகளில் ஆறு சட்டக் கல்லூரிகளைக் கொடுத்து நம்முடைய ஏழைக் குடும்பத்திலே மாணவ மாணவியர்கள் சட்டம் பயிலக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்தது அ.தி.மு.க அரசு. ​

பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதா இருக்கின்ற பொழுது அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தோம். ஆனால் தி.மு.க அரசு வந்ததும் நிறுத்தப்பட்டது. ​

இன்றைக்கு மக்களின் செல்வாக்கு இழந்த காரணத்தினால் அவசர அவசரமாகக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த லேப்டாப் தரமற்ற லேப்டாப் ஆக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அ.தி.மு.க ஆட்சிக்கு வருகின்ற பொழுது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இதில் ஊழல் நடைபெற்றிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Source link