‘மொழி ஈகியரை அசிங்கப்படுத்தினால் சும்மா இருக்க மாட்டோம்’ – திருமுருகன் காந்தி ஆவேசம்

சென்னையில் மே 17 இயக்கத்தின் சார்பில் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை, இயக்கத்தினைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற சிவா திலீபன் கடந்த 11ஆம் தேதி (11.03.2026) அழித்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடைமேடையில் அருகே உள்ள தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ரயிலின் முன் ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என முழக்கமிட்டவாறே தண்டவாளத்தில் இறங்கினார். இதனால் ரயில் மோதி படுகாயமடைந்த சிவா திலீபன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.

இத்தகைய சூழலில் தான் சிவா திலீபன், கடந்த 18.03.2026 அன்று  சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மறைந்த சிவா திலீபனுக்கு, தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்  மே 17 இயக்கத்தின் சார்பில் சிவா திலீபனின் படத்திறப்பு நிகழ்வு அடையாறில் உள்ள டி.என்.ராஜரத்தினம் அரங்கில் நேற்று நடைபெற்றது.

பறை இசையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமுருகன் காந்தி பேசுகையில், ”எங்கள் மொழியின் மீதும், எங்கள் அரசியல் மீதும் நீ முடிவு கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தால் உங்கள் வணிகத்தின் மீது நாங்கள் முடிவெடுக்க வேண்டிய தேவை இருக்கும். உன் வியாபாரத்தில் நாங்கள் முடிவு எடுக்க வேண்டிய தேவை இருக்கும். ஒரு செய்தியை இந்த போராட்டம் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்க வேண்டும். இவர்களை மொத்தமாக விரட்ட வேண்டும் என்றால் இந்தியோடு சேர்த்து குப்பையோடு குப்பையாக வீசி வெளியே எறிய வேண்டும். நமது மாநில கட்சிகளுக்குள்ளே நமக்கு 1008 விமர்சனங்கள் இருக்கலாம் இந்த கூட்டத்தை விரட்ட வேண்டும். போலி தமிழ் தேசியத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறார். 

இவனெல்லாம் தமிழ் மொழிப்பெற்று கொண்டவனா? இவனெல்லாம் தமிழ் தேசியவாதியா? ஆயிரம்  வேறுபாடுகள் இருக்கட்டும் ஆனால் இனத்திற்காக, மொழிக்காக ஒருவர் உயிர் கொடுத்திருக்கிறார் என்றால் அவருக்காக நீ பேச வேண்டுமா இல்லையா? உன்னிடம் இருந்து என்னத்தை பிடுங்கி விட்டோம். உனக்கு மிகப்பெரிய விஷயம் சோறு தான். அதை பிடுங்கி விட்டோமா? ஒரு வார்த்தை பேசவில்லை.

பிஜேபிகாரனுக்கும் இதையேதான் சொல்கிறோம். கருத்துக்கு கருத்துக்கு தான் பதில். அவதூறுக்கு கருத்து பதில் சொல்லாது. நீ கருத்து சொன்னால் கருத்து சொல்வோம் அவதூறு சொன்னால் எப்படி பதில் சொல்ல வேண்டுமோ அப்படித் தான் பதில் சொல்லுவோம். எவனெல்லாம் பாஜகவின் ஐடி விங்கில் இருந்து எழுதுகிறானோ அவன் பேரிலிருந்து விவரம் வரை எல்லாத்தையும் பொது வழியில் கொண்டு வந்து நிறுத்தியே ஆக வேண்டும். இனி யாருக்கும் இது நடக்கக் கூடாது. கருத்து பேசு, எதிர்த்து பேசு, மறுத்துப் பேசு பிரச்சினை இல்லை. ஒரு ஈகியரை இழிவாக பாரத்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்காக உயிரைக் கொடுத்த ஒரு ஈகியரை அசிங்கப்படுத்துவேன், இழிவு படுத்துவேன் என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். எத்தனை நாட்கள் ஜெயிலுக்கு போவதாக இருந்தாலும் போக தயார்” என்று ஆவேசமாக பேசினார். 

Source link