சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த இல்லத்தரசி திட்டத்தின் மூலம் சுமார் ரூ.4,000 கோடி வரை ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாக பாஜவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; திமுக அறிவித்துள்ள ரூ.8000 கூப்பன் திட்டமானது பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டமாகும். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் ஈட்டிய பணத்தை கொள்ளையடிக்கும் மோசமான திட்டம் இது. கூப்பன்களை வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகளில் அரசு அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தும் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் 12,000 ரூபாய்க்கு குறைவாக கிடையாது.
மேலும், எக்ஸ்சேஞ் ஆபர் என்று சொல்லியிருப்பது பெரும் மோசடி திட்டம். உண்மையிலேயே, பழைய பொருட்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது தான் தற்போதைய நிலை. பழைய 180 லிட்டர், 300 லிட்டர் பிரிட்ஜ் மற்றும் தானியங்கி வாஷிங் மெஷினின் உண்மையான மதிப்பு சுமார் ரூபாய் 400 – 800 மட்டுமே. ஆனால், பொருட்களின் அதிகபட்ச விலையை 4000 – 5000 ஏற்றி சொல்லி பழைய பொருளை 5000 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறோம் என்று ஏமாற்று வேலையில் ஈடுபடுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இது போன்ற கூப்பன்கள் மற்றும் தவணை முறையில் ஊழியர்களுக்கு கடன்கள் வழங்கும் திட்டங்களில் ‘Buy back’ முறையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது உலகிற்கே தெரியும்.
திட்டத்தின் படி அரசு, விற்பனையாளர்களிடம் ரூபாய். 8000 கூப்பன் கொடுத்தால் பொருளை விற்காமலேயே ரூ. 2000 குறைத்து ரூ. 6000 மட்டுமே ரொக்கமாக கொடுக்க முன்வருவார்கள் விற்பனையாளர்கள். அதன் பின்னர் அதே பொருளை விலை குறைத்து மற்றவர்களிடம் விற்பார்கள். இதனால் வரி ஏய்ப்பு அதிக அளவில் நடைபெறுவதோடு, நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழில் துறையில் மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மிகப் பெரிய மோசடித் திட்டம் இது.
வறுமையின் சுவடே இல்லாத மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் திமுக, ப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் இல்லாத வீடுகளே தமிழகத்தில் இல்லை என்பதை நன்கு உணர்ந்தே இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இலவசங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அபகரிக்க போடப்பட்ட மோசமான சதித்திட்டம் இது.
மக்களை முட்டாள்கள் என்றெண்ணி பல கோடி குடும்பங்களிடமிருந்து குறைந்தது ரூ.2000 பறிக்க போடப்பட்ட திட்டம் இது! கணக்கு போட்டு பாருங்கள் 2 கோடி குடும்பங்களிடமிருந்து ரூ. 2000 என்றால், மொத்தமாக இந்த ஒரு திட்டத்தின் அடிப்படையில் ரூ.4000 கோடி (ரூபாய் நான்காயிரம் கோடி) ஊழல் நடைபெறும் சாத்தியக்கூறுகள் உள்ளது.
திமுகவின் மெகா மெகா ஊழல் திட்டம் இது. மக்களின் பணத்தை மொத்தமாக கொள்ளையடிக்க திட்டமுள்ளது திராவிட மாடல் திமுக. மக்களே உஷார், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
