தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. அதேபோல் தேர்தல் பறக்கும் படையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களை இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் மு.க.ஸ்டாலின், சீமான்,விஜய் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தவெக தலைவர் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள பெரம்பூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப் புறப்பட்டுள்ளார். அதேநேரம் நாம் தமிழர் கட்சியின் பெரம்பூர் தொகுதி வேட்பாளர் வெற்றித்தமிழன் முதல் ஆளாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
