கோவை: கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் குழுவில், பெயர் இருந்தும் அண்ணாமலை வரவில்லை என்ற

கோவை: கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் குழுவில், பெயர் இருந்தும் அண்ணாமலை வரவில்லை என்ற சர்ச்சையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரவேற்புக்குழுவில் அவரது பெயரே இல்லை என்று வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ள பாஜ, 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பட்டியலில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு திருப்தியில்லை என்றும், அதிமுகவுடன் பேச்சு நடத்திய மாநில நிர்வாகிகள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில்தான், பிரதமர் மோடி மார்ச் 29ல் கோவை வழியாக கேரளா பிரசாரத்துக்கு சென்றார். கோவை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமரை வரவேற்க 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் கொண்ட அந்த குழுவினர், பிரதமரை வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க வில்லை. இது பற்றி கோவை தெற்கு எம்.எல்.ஏ.,வான வானதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘அண்ணாமலை கோவையில் வீட்டில் தான் இருக்கிறார். இருந்தும் பிரதமர் வரவேற்புக்கு வரவில்லையே’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அப்போது வானதி, ”வந்த உடனேயே நான் அதைத்தான் கேட்டேன். அண்ணாமலை எப்போது வருகிறார் என்று கேட்டேன். அதற்கு, ‘வரவேற்பு பட்டியலில் அவரது பெயர் சேர்த்துத்தான் அனுப்பினோம். அவர் தான் வரவில்லை’ என்று தகவல் வந்தது. என்ன என்று கேட்கிறேன்,” என்றார். ஆனால் இப்போது வரவேற்பு குழுவில் இடம் பெற்றிருந்தவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.

அதில், அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை. ஏன் அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை. பட்டியல் தயாரித்தவர்கள் யார், பெயர் விடுபட்டதற்கு யார் காரணம், வானதி ஏன் அப்படி சொன்னார் என்பது பற்றி பாஜ மேலிடம் விசாரணையை தொடங்கியுள்ளது.

விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த குழுவில் இடம் பெற்று இருந்தவர்கள் விவரம்:

1.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

2.மத்திய அமைச்சர் எல்.முருகன்

3.எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்

4.முன்னாள் அமைச்சர் வேலுமணி

5.எம்.எல்.ஏ., அருண் குமார்

6.முன்னாள் அமைச்சர் சண்முகவேலு

7.ஐஜேகே தலைவர் பாரிவேந்தர்

8.பா.ம.க., நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி

9.த.மா.கா., நிர்வாகி ராஜேஸ்வரன்

10.டி.எம்.எம்.கே., நிர்வாகி சுந்தர்

11.உ.உ.க., தலைவர் செல்லமுத்து

12.பாஜ துணைத்தலைவர் கனகசபாபதி

13.பாஜ பொதுச்செயலாளர் முருகானந்தம்

14.பாஜ பொருளாளர் சேகர்

15.பாஜ மாநில செயலாளர் நந்தகுமார்

16.பாஜ மாவட்ட தலைவர் ரமேஷ்குமார்

17.பாஜ மாவட்ட தலைவர் சந்திரசேகர்

18.பாஜ மாவட்ட தலைவர் கரு மாரிமுத்து

19.பாஜ மாநில செயலாளர் சதீஷ்குமார்

Source link