சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்; ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்

சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணி முதல் துவங்கியது. இன்று முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. ஆனால், விடுமுறை தினங்கள் போக 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

இந்த சூழலில், திமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று காலை முதலே வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். கொளத்தூர் தொகுதியில் 4வது முறையாக போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் தாக்கல் செய்தார்.

திமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் தவெக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தொண்டர்களுடன் திரண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா வேட்புமனு தாக்கல் செய்தார். வாக்காளர் அடையாள அட்டையின் நகல் இல்லாததால் வேட்புமனு தாக்கல் செய்ய சிறிது நேரம் காத்திருந்தார்.

புதுக்கோட்டை நாதக வேட்பாளர் எழிலரசி ஏர் கலப்பை, ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

253வது முறை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், தவெக தலைவர் விஜயை எதிர்த்து பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். 1988ம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வர்கள் உள்பட முக்கிய தலைவர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்று அவர் தாக்கல் செய்திருப்பது 253வது வேட்புமனுவாகும்.

Source link