அதேபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற வாக்குறுதியை கடந்த 50 ஆண்டுகளில் 20-ம் முறையாக திமுக அளித்திருக்கிறது. 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அதற்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாகவும், கட்டாய பயிற்று மொழியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு வக்கில்லாத திமுக, தமிழையும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பிற 21 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக்கேடான நகைச்சுவையாகும்.
தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 125 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருக்கிறது. உண்மையில் கடந்த 2023- 24ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை 125 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அப்போதைய வேளாண் துறை இயக்குனரும், இப்போதைய வேளாண் துறை செயலாளருமான தட்சிணாமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளாகியும் அந்த இலக்கை எட்ட முடியாத திமுக அரசு, இப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் எட்டுவதற்கான வாக்குறுதியாக அந்த இலக்கை அறிவித்திருப்பது தோல்வியின் வாக்குமூலம் ஆகும்.
எந்த வகையில் பார்த்தாலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனளிக்கக் கூடியதோ, வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதோ அல்ல. ஏற்கனவே 505 வாக்குறுதிகளை அளித்து அவற்றில் 87 % வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்த திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் உறுதி பூண்டிருப்பதால் அதன் தேர்தல் அறிக்கை யாருக்கும் பயன்படாத ஆணி தான்” என்று அன்புமணி கூறியுள்ளார்.
