சென்னை: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜயுடன் மோதும் வேட்பாளர்கள் பற்றி ஒரு அலசல்.
சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் போட்டியிடுவதால் இந்த இரு தொகுதிகளும், முக்கிய தலைவர்கள் போட்டியிடும் ஸ்டார் தொகுதியாகி விட்டது. வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாளான இன்று, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை விஜய் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து கொடுங்கையூரில் தனது பிரசாரத்தை துவங்கி விட்டார்.
தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும், அதில், பெரம்பூர் போன்ற தொகுதிகளின் நிலவரங்களை மக்கன் உன்னிப்பாக கவனித்து கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் யார் யாருக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
திமுக
தற்போது ஆளும் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் ஆர்.டி.சேகர். இவர் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கிறார். 2019ம் ஆண்டு பெரம்பூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மீண்டும் 2021ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டார். இந்த இரு தேர்தல்களிலும் அவர் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஓட்டுகளை பெற்றுள்ளார். குறிப்பாக, கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தனபாலனை விட 54 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தற்போது, 3வது முறையாக பெரம்பூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் ஆர்.டி.சேகரே வெற்றி பெறுவார் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நம்புகின்றனர்.
பாமக
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக திலகபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டுள்ள இவர், பாமகவில் நன்கு அறியப்பட்ட தலைவர்களில் ஒருவர். பாமக அன்புமணி மற்றும் ராமதாஸ் என இரு பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில், இவர் அன்புமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்டார். அதில், திலகபாமா 30 ஆயிரம் ஓட்டுகளே பெற்றார். இவர் பெரும்பாலும் அதிமுகவின் ஓட்டு வங்கியை நம்பியே களமிறங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நாதக
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நாதக சார்பில் மெர்லின் சுகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் சுமார் 19 ஆயிரம் ஓட்டுகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். தற்போது, நாதக வேட்பாளராக வெற்றிச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தவெக
முதல்முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கும் விஜய், பெரம்பூர் தொகுதியை தேர்வு செய்துள்ளார். மற்ற கட்சிகளில் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட அனுபவமுடைய பின்னணிகளைக் கொண்ட வேட்பாளர்களை எதிர்த்தே தவெக தலைவர் விஜய் களமிறங்கியுள்ளார். சினிமா ரசிகர்கள் பின்புலம் மற்றும் மக்களிடையே பிரபலமான முகமாக இருப்பது விஜய்க்கு கூடுதல் பலமாகும். எனவே, தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான ஆர்.டி.சேகருக்கு, விஜய் நிச்சயம் கடும் போட்டியாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
