எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி; 21 மாநிலங்களில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்

மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அவசரக் கால நடவடிக்கையாக நியாய விலை கடைகள் மூலமாக மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 60 நாட்களுக்கு இந்த மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறிப்பாக, மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விநியோகம் நியாய விலை கடைகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பொதுத்துறை எரிபொருள் நிலையங்களில்  (பெட்ரோல் பங்க்)  மக்கள் மண்ணெண்ணெய்யைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு எரிபொருள் நிலையங்களும் மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதில் ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் 2500 லிட்டர் மண்ணெண்ணெய் வீதம் இரு எரிபொருள் நிலையங்களும் 5000 லிட்டர் வரை சேமித்துவைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எரிபொருள் சென்றடைவதை உறுதி செய்ய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சமையல் மற்றும் விளக்கு எரித்தல் போன்ற வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே இந்த மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இது போன்ற நடவடிக்கைகளில் இருந்து மக்கள் எரிபொருளை வீணாக்காமல், பொறுப்போடு கையாள்வது அவசியம் என்பது தெளிவாகிறது. 

Source link