தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்; தவெக திடீர் பரபரப்பு புகார்!

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே  இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (30-03-26) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் அவர் திமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டி விமர்சித்தார்.

அந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்ததால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த பிரச்சாரத்தை முடித்துவிட்டு முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தனது வாகனத்தில் விஜய் சென்றுக் கொண்டிருந்தார்.  அப்போது ஏராளமான தொண்டர்கள் அந்த வாகனத்தை சுற்றி சூழந்ததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவியது.  

இந்த நிலையில், விஜய் பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தவெக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இது குறித்து தவெக தெரிவித்துள்ளதாவது, “பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரச்சார இடத்தில் இருந்து இன்னொரு பிரச்சார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவரது பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின்  பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது. 

Source link