டிஎன்ஏ பரிசோதனை முடிந்தது – மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கின் அப்டேட்!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமயல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மகளில் ஆணையரகத்தில் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பினரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். அனைத்தும் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே ஜாய் கிரிசில்டாவிற்கு குழந்தை பிறந்தது. 

இதனிடையே ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப்பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். அப்போது மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இதனால் தங்களது நிறுவனத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இருவருக்கும் மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரை நீதிமன்றம் நியமித்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல் இந்த மரபணு சோதனைக்கு தான் தயாராக இருப்பதாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவரது தரப்பிலும் மரபணு சோதனைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட நீதிமன்றம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. மேலும் அந்த அறிக்கையை மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதியிடம் சமர்பிக்க ஒரு வழக்கறிஞர் ஆணையரை உருவாக்கியது. 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்திருந்த நிலையில் அதன்படி இன்று நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஆணையர், மரபணு சோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள், மத்தியஸ்தரிடம் சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்கப்பட்டதாக, தெரிவித்தார். பின்பு மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா தரப்பில், இரு தரப்பிலும் மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, ஜூன் 8 ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இதனிடையே தாக்கல் செய்யப்பட்ட டிஎன்ஏ அறிக்கையில் மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link