முதல் நாளிலேயே பின்வாங்கிய விஜய்; வருத்தம் தெரிவித்த மாவட்டச் செயலாளர்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (30-03-26) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இன்று மட்டும் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்று திட்டமிடப்பட்டிருந்தது,

அதன்படி, விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் அவர் திமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டி விமர்சித்தார். இந்த பிரச்சாரத்தை முடித்துவிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ்.பாபு போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தைத் தொடர்ந்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கொளத்தூர் தொகுதியில் வில்லிவாக்கம் செல்வதற்காக வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருந்த போது ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், விஜய்யின் வாகனத்தை ஏராளமான தொண்டர்கள் சுற்றியதால் வாகனம் நகர முடியாமல் வெகு நேரம் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது. இதனிடையே, விஜய் பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் சென்னை காவல்துறி ஒருதலைபட்சமாக செயல்பட்டு போக்குவரத்தை முறைபடுத்தவில்லை எனவும் தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வில்லிவாக்கம் தவெக மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் தொண்டர்களிடையே கூறியதாவது, “விஜய்க்கு சரியான பாதுகாப்பு கொளத்தூரில் கொடுக்கவில்லை. அதனால் விஜய் அங்கு பேச முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டார். அங்கிருந்து வர ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் விஜய் இங்கு பிரச்சாரம் செய்வதை ரத்து செய்துள்ளார். தயவு செய்து, அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் தவெக சார்பில் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். விஜய் இன்னொரு நாள் வில்லிவாக்கம் தொகுதியில் தனியாக வந்து பிரச்சாரம் செய்வார்” என்று கூறினார். 

Source link