விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?; வெளியான வேட்புமனு விவரம்!

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே  இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (30-03-26) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவின் சொத்து விவரம் வெளியானது. அதில் விஜய்யின் அசையும் சொத்து மதுப்பு ரூ.404.58 கோடி உள்ளதாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ.11.51 கோடி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் விஜய்யின் ஆண்டு வருமானம் விவரமும் வெளியாகியுள்ளது. 2021-2022 நிதியாண்டில் ரூ.237.46 கோடி உள்ளதாகவும், 2022-2023 நிதியாண்டில் ரூ.198.71 கோடி உள்ளதாகவும், 2023-2024 நிதியாண்டில் ரூ.105.69 கோடி உள்ளதாகவும் 2024-2025 நிதியாண்டில் ரூ.184.53 கோடி உள்ளதாகவும் விஜய் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

அசையா சொத்தின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.220 கோடி இருக்கும் எனவும், பூர்விக சொத்தின் மொத்த மதிப்பு ரூ.21.83 கோடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 110 சவரன் தங்கம் உள்ளதாகவும், ரூ.1 கோடி மதிப்பிலான வைரக் கற்கள் உள்ளதாகவும், ரூ.15 மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் உள்ளதாகவும் விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் பிஎம்டபிள்யூ 530, ரூ.3 கோடி மதிப்புள்ள டொயொட்டோ லெக்ஸஸ், டொயொட்டோ வெல்பயர், பிஎம்டபிள்யூ 17, மாருதி சுவிப்ட் ஆகிய 5 சொகுசு கார்கள் உள்ளதாகவும் டிவிஎஸ் XL சூப்பர் என்ற இருசக்கர வாகனம் உள்ளதாகவும் விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து விஜய்யின் கையில் ரொக்கமாக ரூ.2 லட்சமாக உள்ளதாகவும், மனைவி சங்கீதா பெயரில் ரொக்கமாக ரூ.1 லட்சம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.213.36 கோடி உள்ளதாகவும், ஆக்சிஸ் வங்கியில் ரூ.57 கோடி உள்ளதாகவும், எச்.டி.எஃப்.சி வங்கியில் ரூ.77 லட்சம் உள்ளதாகவும், ஸ்டேட் வங்கியில் ரூ.16 ஆயிரம் உள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். அதே போல், தேர்தல் செலவினங்களுக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி சங்கீதா பெயரில் ரொக்கமாக ரூ.1 லட்சம் உள்ளதாகவும் எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி, இந்தியன் வங்கியில் ரூ.25 கோடி வைப்புத்தொகை உள்ளதாகவும், ஆக்சிஸ் வங்கிக் கணக்கில் ரூ.40 கோடி வைப்புத்தொகை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி சங்கீதாவுக்கு சுமார் 391 சவரன் நகைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நீலாங்கரை, சாலிகிராமம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் வீடுகள், வணிகக் கட்டடங்கள் இருப்பதாகவும், கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் 2 இடங்களில் சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தந்தை சந்திரசேகருக்கு ரூ.3 கோடி கடன் அளித்துள்ளதாகவும், தாய் ஷோபனாவுக்கு ரூ.87 லட்சம் கடன் அளித்துள்ளதாகவும், தவெக பொதுச் செயலாளர் ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன் அளித்துள்ளதாகவும், மகன் ஜேசன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யா சாசாவுக்கு ரூ.4,60 லட்சமும் கடன் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சகோதரி வித்யா பெயரிலான டிரஸ்டுக்கு ரூ.5.84 கோடியும், விஜய் வித்யாஷ்ரம் டிரஸ்ட்டுக்கு ரூ.24.96 லட்சமும் கடன் கொடுத்துள்ளதாக விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Source link