பெற்றோர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க புதிய சட்டம்; தெலுங்கானா அரசு அதிரடி

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று (29-03-26) தெலுங்கானா சட்டப்பேரவையில் புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, பெற்றோர்களைக் கவனிக்கத் தவறும் அல்லது புறக்கணிக்கும் அரசு மற்றும் தனியார்த் துறை பணியாளர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படும்.  

“தெலுங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதைக் கண்காணித்தல் மசோதா, 2026″ க்கு நேற்று சட்டப் பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, ” மூத்த குடிமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு இந்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இது ஏற்கனவே, உள்ள பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007 என்ற தேசிய சட்டத்தை விட மேம்பட்டது. 

இந்த புதிய மசோதாவின்படி, பொதுப்பிரதிநிதிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைவரும் தங்களின் பெற்றோர்களைக் கவனித்துக் கொள்வது அவசியமாகிறது. இதனை கடைப்பிடிக்கத் தவறினால், அவர்களின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் (இதில் எது குறைவோ) பிடித்தம் செய்யப்படும்.  பெற்றோர்களை புறக்கணிக்கும் பிள்ளைகளைத் திருத்துவது சமூகத்தின் கடமையாகும். ஒரு சமூக கடமையாக, இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது ’’ என்று தெரிவித்தார்.

ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை நேரடியாக அவர்களது பெற்றோர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த விதிகள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்ற தகவல்களும் வெளியாகின்றன. இதன் மூலமாகப் பெற்றோர்கள் அல்லது முதியவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது.  

Source link