தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தக்கட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (30-03-26) திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஒரு சில இடங்களில் திமுக சார்பாக இன்று தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்தார். அதனை தொடர்ந்து தேர்தல் பரப்புரை வியூகம் தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எனது அழைப்பை ஏற்று கூட்டணி கட்சித் தலைவர்கள் தேநீர் விருந்திற்கு வந்ததற்காக மனமார்ந்த நன்றி. தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளோம். நாம் அமைத்திருக்கும் கூட்டணி புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் நீண்டகால கூட்டணியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
2 நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் என தொடர்ந்து இருக்கக்கூடிய கூட்டணியாக நம் கூட்டணி இருக்கிறது. ஏற்கெனவே உள்ள கட்சிகளுடன் புதிதாக சில கட்சிகளும் தற்போதைய கூட்டணியில் இணைந்துள்ளன. எல்லாவற்றையும் மறந்து நாம் அனைவரும் கூட்டணி அமைத்துள்ளோம். நிச்சயம் வெல்வோம்” என்று கூறினார்.
