“எந்தவிதமான காவல்துறை ஒத்துழைப்பும் இல்லை” – ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (30-03-26) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இன்று மட்டும் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்று திட்டமிடப்பட்டிருந்தது,

அதன்படி, விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரத்தை முடித்துவிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ்.பாபு போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தைத் தொடர்ந்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கொளத்தூர் தொகுதியில் வில்லிவாக்கம் செல்வதற்காக வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருந்த போது ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் விஜய் பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் சென்னை காவல்துறி ஒருதலைபட்சமாக செயல்பட்டு போக்குவரத்தை முறைபடுத்தவில்லை எனவும் கூறி தவெக தலைவர் விஜய்யின் வில்லிவாக்கம் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு 4 இடத்தில் இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். பெரம்பூரில் காவல்துறை ரொம்ப சிறப்பாக செயல்பட்டு சாலைகளை பிளாக் செய்து அதிகமாக கூட்டம் கூடாத அளவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் சொல்பவர்கள் அல்ல. காவல்துறையும் தேர்தல் ஆணையம் எங்கு அனுமதி கொடுத்தார்களோ அந்த இடத்தில் நின்று விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது. ஆனால் பெரம்பூரில் இருந்து கொளத்தூர் செல்லக்கூடிய வழி காவல்துறைக்கு தெரியும். விஜய் எந்த வழியாக வர வேண்டும், எந்த இடத்தில் நின்று பேச வேண்டும் என்பது குறித்து காவல்துறை என்.ஓ.சி கொடுத்து தான்  அனுமதி கொடுப்பார்கள். அதனால் காவல்துறைக்கு விஜய் எந்த வழியாக வருவார் என்பது தெரியும்.

பெரம்பூரில் இருந்து கொளத்தூர் போவதற்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் விஜய் வரக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். எப்படி கரூரில் மனிதர்களால் உருவான கூட்ட நெரிசலை செந்தில் பாலாஜி உருவாக்கினாரோ, அதே மாதிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். தன்னுடைய தொகுதிக்குள் யாருமே பிரச்சாரம் செய்யக்கூடாது என்று செயல்பட்டுள்ளார். பெரம்பூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் எந்த இடத்திலும் காவல்துறை இல்லவே இல்லை. அங்கு எந்தவிதமான காவல்துறையும் ஒத்துழைப்பு இல்லை” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். 

Source link