தேர்தல் ஆட்டத்தைத் தொடங்கிய ராமதாஸ்; வெளியான பரபரப்பு பட்டியல்!

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, வருகிற மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே புதிதாக, ‘அனைந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய சசிகலா, பா.ம.க நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளார். கடந்த மார்ச் 20ஆம் தேதி தைலாபுரத்தில் உள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு சென்ற சசிகலா, அவரை சந்தித்துப் பேசி கூட்டணியை உறுதி செய்தார். இந்த புதிய கூட்டணி மூலம், திமுக, அதிமுக, தவெக, நாதக மற்றும் ராமதாஸ் – சசிகலா கூட்டணி என 5 முனை போட்டி தமிழ்நாட்டு தேர்தலில் உருவாகியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தங்கள் தரப்பு பா.ம.கவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ராமதாஸ் இன்று (30-03-26) வெளியிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சேலம் மேற்கு தொகுதியில் அருள், கும்பகோணம் தொகுதியில் மா.கா.ஸ்டாலின், விருத்தாச்சலம் தொகுதியில் ஈ.கே.சுரேஷ், வந்தவாசி தொகுதியில் முரளிசங்கர், மயிலாடுதுறை தொகுதியில் பாக்கம் சக்திவேல் ஆகிய 5 வேட்பாளர்களை நாங்கள் முதற்கட்டமாக இன்று வெளியிடுகிறோம்” என்று தெரிவித்தார். முன்னதாக ராமதாஸ் கூட்டணியில் உள்ள சசிகலா 21 வேட்பாளர்களை நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link