சென்னை: ”தேர்தல் பிரசாரம் செய்ய, பல தொகுதிகளுக்குள் எங்களால் நுழைய முடியவில்லை,” என, த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
அவரது பேட்டி:நாங்கள் அரசியல் ரீதியாக குற்றச்சாட்டு சொல்பவர்கள் அல்ல. பெரம்பூரில் போலீசார் சிறப்பாக செயல்பட்டனர். வேட்புமனு தாக்கல் சீக்கிரம் முடிந்ததால், போலீஸ் அனுமதி பெற்று, பெரம்பூரில் விஜய் பிரசாரம் செய்தார்.ஆனால், அங்கிருந்து விஜய் கொளத்துாருக்கு வரக்கூடாது என, ‘காபந்து’ முதல்வர் ஸ்டாலின் உள்நோக்கத்துடன் நடந்துள்ளார். கரூரில் செந்தில் பாலாஜி எப்படி திட்டமிட்டு, நெரிசல் சம்பவத்தை நடத்தினாரோ, அதேபோல் கொளத்துாரிலும் செய்யப்பட்டது.
கொளத்துாருக்கு வரும் வழியில், ஒரு போலீஸ் கூட இல்லை. குறுகிய சாலையில், பெண்களும், குழந்தைகளும் வந்தனர். நாங்கள், அவர்களை வர வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். ஆனாலும், தன்னெழுச்சியாக வருபவர்களை, போலீசார் தடுக்கவில்லை. ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் செயல்படுகிறார். கொளத்துாரில் மக்கள் அலை இருந்ததால், விஜய் பதற்றமாகி விட்டார். குறுகிய சாலையில் மக்களை அதிகமாக கூட விட்டு, மீண்டும் கரூர் சம்பவம் போல் நடக்க வைக்க பார்த்தனர். கொளத்துாரில் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு உள்ளது. அவரின் ரோடு ஷோவை பார்க்க ஆளே இல்லை.
தோல்வி பயத்தில், எங்களை உள்ளே விடக்கூடாது என, சூழ்ச்சி செய்கிறார். அவர் அமைதியாக இருந்து, யாரையும் குறை சொல்லாமல், போலீசை வைத்து எல்லாவற்றையும் செய்கிறார். இன்னும் பல தொகுதிகளில் எங்களால் நுழைய முடியவில்லை. மீண்டும் இழப்பு வந்துவிடக்கூடாது; மக்களின் பாதுகாப்புக்காக தான் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு கரூர் சம்பவம் நடந்து விடக்கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை கேட்டுக் கொள்கிறேன். நேர்மையான அதிகாரிகளை நியமித்து, தேர்தல் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
