மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம் என்ற பெயரே இல்லை: துணை முதல்வர் உதயநிதி சாடல்

காஞ்சிபுரம் : ”இந்தியாவிலேயே தமிழ்நாடு தான், 11.19 சதவீதம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக திகழ்கிறது” என, துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவில்லத்தில், அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், தி.மு.க., வேட்பாளர் நித்யாவை ஆதரித்து, தேரடி பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் உதயநிதி பேசியதாவது:கடந்த தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம். முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டு, மகளிர் விடியல் பயணம் திட்டத்தை துவக்கி வைத்தார். துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம், 10 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களில், 13 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். 1.35 கோடி இல்லத்தரசிகள், மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். 5,000 ரூபாயை முன்கூட்டியே முதல்வர் வழங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் தொகுதியில் 300 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை, 300 கோடி ரூபாய் செலவில், இரண்டாம் கட்ட திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், துவக்க பள்ளிகளில் அமலில் உள்ள காலை உணவு திட்டம், எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். மகளிர் உரிமை தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படும். மகளிர் குழுக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையில் கடனுதவி வழங்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான், 11.19 சதவீதம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக திகழ்கிறது. ஆனால், மத்திய அரசு திட்டங்கள், தமிழகத்திற்கு வழங்கப்படுவதில்லை. அவற்றில் தமிழகம் என்ற பெயரே இல்லை.அ.தி.மு.க.,வை அடிமைப்படுத்தி, தமிழகத்தை ஆள நினைப்போரை விரட்டி அடிப்போம். தமிழகம் என்றைக்குமே டில்லிக்கு ‘அவுட் ஆப் கன்ரோல்’ தான்.இவ்வாறு அவர் பேசினார்.

Source link