நாகர்கோவில்:தலைமையுடன் மோதிவரும் அமைச்சர் மனோ தங்கராஜின் மாவட்ட செயலர் பதவியை பறிக்க தி.மு.க., வில் கோரிக்கை

நாகர்கோவில்:தலைமையுடன் மோதிவரும் அமைச்சர் மனோ தங்கராஜின் மாவட்ட செயலர் பதவியை பறிக்க தி.மு.க., வில் கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2021 தேர்தலில், தி.மு.க. தலைமையிடம் நெருக்கமாக இருந்த சுரேஷ்ராஜன், நாகர்கோவில் தொகுதியில் தோல்வி அடைந்தார். பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும் தி.மு.க., வெற்றி பெற்று, மனோ தங்கராஜ் அமைச்சர் பொறுப்பேற்றார்.

கட்சி நிர்வாகி, தொண்டர், தொகுதி மக்கள் யார் அழைத்தாலும் மொபைல் போனை எடுப்பதில்லை என்ற புகார் அவர் மீது உண்டு. பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வந்தார். தேவசம்போர்டு கோவில் விழாக்களில், இவர் கலந்து கொள்வதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்டத்தின் மிக முக்கிய கோவிலான மண்டைக்காட்டில் பிரச்னை ஏற்படுத்தும் முயற்சியில் இவரது பெயரும் அடிபட்டது. பின், அறநிலையத்துறை அமைச்சர் நாகர்கோவிலில் முகாமிட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டார்.

கனிமவளக் கடத்தலில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளதாக தொடர்ந்து மாவட்டத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஆறு மாத இடைவெளியில், மீண்டும் ஒரு குறிப்பிட்ட மத தலைவர்களின் நெருக்குதலுக்கு பணிந்து, மீண்டும் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.இந்த கால அளவில், இவர் த. வெ.க.,வில் இணைவதற்கான முயற்சி நடந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது இவரது தொகுதியை தி.மு.க. தலைமை மார்க்சிஸ்ட்டுக்கு கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், இவரது ஆதரவாளர்கள் என கூறிக்கொண்டு நூற்றுக்கணக்கானவர்கள் கூடி, மனோ தங்கராஜுக்கு பத்மநாபபுரம் தொகுதி ஒதுக்க வேண்டும் என தீர்மானம் போட்டதோடு, அலுவலகத்தில் இரவிலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இது கட்சி தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரை மாவட்ட செயலர் பதவியில் இருந்து மாற்றி, புதிய பொறுப்பாளரை நியமித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என, சிலர் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர். இதனால் மனோ தங்கராஜின், மாவட்ட செயலர் பதவியும் கேள்விக்குறியாகியுள்ளது.

Source link