வி.சி.க., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் புறக்கணிப்பு

சென்னை: வி.சி.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், ‘சீட்’ மறுக்கப்பட்ட தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை. அக்கட்சி தலைவர் திருமாவளவனும் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார்.

தி.மு.க., கூட்டணியில், வி.சி.க.,வுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ‘சீட்’ கேட்டு திருமாவளவனுக்கு, கட்சியினர் பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்தனர். காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் கடும் போட்டி நிலைவியது. இது கோஷ்டி மோதலாக மாறக்கூடும் என்ற நிலை உருவானதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, திருமாவளவன் முன்னிலையில் நடந்த நேர்காணலிலேயே சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பாதியில் வெளியேறியதாக கூறப்படுகிறது. அதிருப்தி அடைந்த திருமாவளவன், கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். இதற்கிடையில், கட்சி அலுவலகம் வராமலேயே, அவரது முகநுால் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, வேட்பாளர்களை அறிவித்தார்.அதில், கட்சியினரே எதிர்பார்க்காத நிலையில், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யாக இருக்கும் திருமாவளவன், சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அதேபோல், அவரது அக்கா பானுமதி மகள் மாலதி, கள்ளக்குறிச்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

தற்போதைய எம்.எல்.ஏ.,க்களில், சிந்தனைச்செல்வனுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது. எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.இந்நிலையில், வி.சி.க., வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.க., அலுவலகத்தில் நடந்தது. இதில், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதேநேரம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை புறக்கணித்தனர். அத்துடன், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோரும் பங்கேற்கவில்லை.நிகழ்ச்சி முடிந்ததும், செய்தியாளர்களை திருமாவளவன் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் சந்திக்காமல் சென்று விட்டார்.

இதற்கிடையில், தனியார் செய்தி சேனலுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:கூடுதல் தொகுதிகளை பெறும் வலிமை வி.சி.க.,வுக்கு இருக்கிறது என்பதை, பழனிசாமி வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு பழனிசாமிக்கு நன்றி. தி.மு.க., கூட்டணியில் அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். கூடுதலான தொகுதிகளை கேட்டோம்; கிடைக்கவில்லை. ஆனால், சூழலை உணர்ந்து ஏற்றுக்கொண்டோம்.

தி.மு.க., கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதை, விஜய் போன்ற பலராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. வேறு எதையும் பற்றி பேச முடியாததால், போதைப் பொருள் அதிகம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பிரசாரத்தை திசை திருப்புகின்றனர். எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Source link