சிறுபான்மையினருக்கு ஸ்டாலின் தான் பாதுகாப்பா? சீமான் காட்டம்

காரைக்குடி: காரைக்குடி அருகே புதுவயலில் நடந்த பொதுக் கூட்டத்தில், சிறுபான்மையினருக்கு ஸ்டாலின் தான் பாதுகாப்பு என்றால் அல்லா, இயேசு பாதுகாக்கவில்லையா என சீமான் கேள்வி எழுப்பினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீமான் புதுவயல் பஸ் ஸ்டாண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது: சாராயத்திற்கு வீரன் என்று பெயர் வைத்தவனை விடக்கூடாது. சாராயம் வீரன் என்றால் சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் புலித்தேவன் மருது பாண்டியர்கள் வேலுநாச்சியாருக்கு எப்படி பெயர் வைப்பது.

விடுதலை பெற்ற 80 ஆண்டு கால இந்தியாவில் ஒரு இஸ்லாமியர், கிறிஸ்தவர் பிரதமராக இருந்தது உண்டா. ஒன்றுக்கும் உதவாத குடியரசுத் தலைவர் பதவியில் உட்கார வைப்பார்கள். சிறுபான்மையினர் என்று கூறினால் அவர்களை தேய்ந்த செருப்பால் அடியுங்கள். கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் இங்கு தேர்தலில் நிற்கிறார்கள். சிறுபான்மையினருக்கு ஸ்டாலின் தான் பாதுகாப்பு என்றால், அல்லா, இயேசு பாதுகாக்கவில்லையா.

50 வருடமாக அவர்களுக்கு ஓட்டு போட்ட நீங்கள் இந்த முறையும் ஓட்டு அவர்களுக்கே ஓட்டு போடுங்கள். நீங்கள் மாற மாட்டீர்கள். நான் அல்லாவிடம் பேசிக்கொள்கிறேன். நீங்கள் திராவிடர்கள் என்றால் எனக்கு ஓட்டு போட வேண்டாம். தமிழர்கள் என்றால் ஓட்டு போடுங்கள். ஓட்டு மதிப்புமிக்கது. எனக்கு ஓட்டு போடுங்கள். விற்பதற்கு என்றால் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.

வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பேன் என்று சீமான் பேசிய போது, இளைஞர் ஒருவர், வீட்டுக்கு ஒருவருக்கு எப்படி அரசு வேலை கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். என்னால் கொடுக்க முடியும். இதேபோல் ஸ்டாலின், இபிஎஸ் வரும்போதும் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தேவகோட்டையில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் ரூ.10.50 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் மீண்டும் இலவசங்களை அறிவித்தால் எப்படி செயல்படுத்துவீர்கள். மீண்டும் கடன் வாங்க வேண்டும். மக்களின் மீது வரிச் சுமையை ஏற்றி வளத்தை சுரண்டுவீர்கள். கடன் வாங்குவது நம் இனத்தை அடமானம் வைப்பதற்கு சமம். வெள்ளம் வந்தால் நிவாரணம் வழங்குவது நல்லாட்சி அல்ல. வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது தான் நல்லாட்சி.

13 தலைமுறைக்கு ஒருமுறை மரபணு மாற்றமடையும். நம் மரபணு மாறிவிட்டது. அதை மீட்டெடுக்க வரலாறு முக்கியம். அதைத்தான் நான் செய்கிறேன். மக்களை கையேந்த வைப்பது எப்படி இலவசமாகும். மதுக்கடையை வைத்து ஆட்சி நடத்துகிறீர்கள்.

தி.மு.க., 23 கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பயத்தினால் தான். ஒருவர் இரு தொகுதியில் போட்டியிடுவதும், ஒரு பொறுப்பில் இருக்கும் போது மற்றொரு தொகுதியில் போட்டியிடுவதும் எங்களது கோட்பாடில்லை. மறுபடியும் ஒரு தேர்தல் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இதை தடுக்க ஓட்டு எண்ணிக்கையில், 2வதாக வந்தவரை தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் பதவியை விட்டுச் சென்றவர்களிடம் பணத்தை வாங்கி தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

Source link