புதுடில்லி: நாடு முழுதும் உள்ள பள்ளி, அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 1,100 முறை மிரட்டல் இ – மெயில் அனுப்பிய, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர், டில்லியில் கைது செய்யப்பட்டார்.
டில்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இ – மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சமீபத்தில் அதிகளவில் நடந்துள்ளது. பள்ளி மற்றும் அரசு நிறுவனங்கள் துவங்கும் காலை நேரத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதால், அது எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியாமல் போலீஸ் அதிகாரிகள் திணறி வந்தனர்.
வெளிநாடுகளில் உள்ள முகவரியில் இருந்து அந்த மெயில்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. சோதனைகளின் முடிவில், அந்த மிரட்டல் வெடிகுண்டு இ – மெயில், வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது. எங்கிருந்து அந்த மெயில்கள் அனுப்பப்படுகின்றன என்பதை, டில்லி போலீசார் ரகசியமாக ஆராய்ந்து வந்தனர்.
இறுதியில், அந்த மெயில்கள், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அனுப்பப்பட்டதை அறிந்து, அந்த ஊரின் போலீசார் உதவியுடன் ரகசியமாக அந்த நபரை தேடும் பணியில் டில்லி போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீனிவாஸ் லுாயிஸ், 47, என்ற நபர் தான், நாடு முழுதும் மிரட்டல் இ – மெயில் அனுப்பினார் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அதில், அவர், இதுவரை, 1,100 வெடிகுண்டு மிரட்டல் இ – மெயில்களை அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு நகரை பூர்வீகமாக கொண்ட முதுகலை பட்டதாரியான இவரின் தாய், கர்நாடகா அரசின் முன்னாள் ஊழியர். திருமணம் ஆகாத இந்த நபர், தன் தாயுடன் மைசூரு நகரில் வசித்து வந்தார். அவரை உள்ளூர் போலீசார் உதவியுடன் கைது செய்துள்ள டில்லி போலீசார், மேல் விசாரணைக்காக அவரை டில்லிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
