சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளில், சென்னை கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் த.வெ.க., தலைவர் விஜய், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் உட்பட, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 498க்கும் மேற்பட்டோர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில், தி.மு.க., – அ.தி.மு.க., – த.வெ.க., – நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ் – பா.ஜ., தவிர, மற்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
உறுதிமொழி
இந்நிலையில், மனு தாக்கல் நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது. சென்னை கொளத்துார் தொகுதியில், நான்காவது முறையாக போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், மதியம் 12:20 மணிக்கு, பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் மனு தாக்கல் செய்தார்; உறுதிமொழி படிவத்தையும் முதல்வர் வாசித்தார்.
அதன்பின், திறந்த ஜீப்பில் ஏறி, கையை அசைத்தபடியே சிறிது துாரம் சென்றார். அங் குள்ள காந்தி சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில், ‘நம்ம கொளத்துார்; நம்ம பெருமை’ என்ற கையேட்டை வெளியிட்டார்.
கொளத்துார் தொகுதிக்கு ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்த விபரங்கள், அதில் இடம் பெற்றுள்ளன.
சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., தலைவர் விஜய், வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு, பிரசார வேனில் வந்தார்.
அணிவகுப்பு
அவரை பின்தொடர்ந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். மதியம் 12:10 மணிக்கு தன் மனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம்விஜய் வழங்கினார். பின், மதியம் 1:30 மணிக்கு பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை துவக்கினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான், அங்குள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். சீமானுக்கு மாற்று வேட்பாளராக, அவரது மனைவி கயல்விழி மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 234 பேரும் நேற்று மாட்டு வண்டி, ஏர் கலப்பை உள்ளிட்டவற்றுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் துவங்கிய முதல் நாளிலேயே, மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் நேற்று தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தமாக நேற்று 498 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
